Published : 21 Jan 2021 05:34 PM
Last Updated : 21 Jan 2021 05:34 PM
வேளாண் சட்டங்கள் குறித்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 உறுப்பினர்கள் கொண்ட சமரசக் குழுவினர், 8 மாநில விவசாய அமைப்பின் பிரதிநிதிகளுடன் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆலோசனையை இன்று தொடங்கினர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
அந்தக் குழுவில், “பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோர் இடம் பெற்றனர்.
இதில் பாரஜிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்திர சிங் மான் மட்டும் தன்னை குழுவிலிருந்து விடுவித்துக்கொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அமைத்த சமரசக் குழுவினரில் 3 பேர் மட்டும் கடந்த 19-ம் தேதி முதல் முறையாகக் கூடி அவர்கள் மட்டும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் இன்று முதல் முறைப்படி வேளாண் சட்டங்கள் குறித்து 8 மாநில விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக சமரசக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “ வேளாண் சட்டங்கள் தொடர்பாக 8 மாநில விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று முதல் காணொலி வாயிலாக ஆலோசனையைத் தொடங்கியுள்ளோம்.
தமிழகம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பிரிதிநிதிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களைக் கூறவும், விவாதிக்கவும், வெளிப்படையாகப் பேசவும் உரிமைஉண்டு. இதன் மூலம் சட்டத்தை மேலும் மேம்படுத்தி, சீர்படுத்தி நடைமுறைப்படுத்த முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT