Published : 20 Jan 2021 06:49 AM
Last Updated : 20 Jan 2021 06:49 AM
நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி தொடங்க அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அனுமதி மறுக் கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் எழுதிய புகாரை ஏற்று மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தன் மகனுக்காக புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழக தேர்தலில் போட்டி யிடுவதற்காக மத்திய தேர்தல் ஆணை யத்தில் மனு செய்திருந்தார். தனது பெயரில் கட்சியை தொடங்க தொடக்கம் முதலே நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தற்போது இந்த விவகாரத்தில், டெல்லி மத்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து பல புதிய தகவல்கள் ’இந்து தமிழ்’ நாளேட்டுக்கு கசிந்துள்ளன.
இதன்படி, புதிய கட்சி தொடங்க சந்திரசேகர் அளித்த விண்ணப்பத்தில், மூன்று பெயர்களிலும் மகன் விஜய் பெயர் இடம் பெற்றிருந்தது. சந்திர சேகர் மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சில மாதங் களுக்கு முன்பாகவே அதை ஏற்றதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் குறிப் பிட்டிருந்த மூன்றில் ஒரு பெயரை தேர்தல் ஆணையம் சந்திரசேகருக்கு அளிக்கவும் முடிவு செய்திருந்தது.
புகார் மனு
இச்சூழலில் நடிகர் விஜய் சார்பில் ஒரு புகார் மனு, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. தனது பெயரில் எவரும் கட்சி தொடங்க தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது எனவும் அதன்மூலம் பிரபல நடிகரான தனது புகழுக்கு களங்கம் ஏற்படும் எனவும் இதை மீறி அனுமதி அளிக்கப்பட்டால் தாம் நீதிமன்ற படியேற இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் விஜய் எச்சரித்திருந்தார். இந்த புகாரை பரிசீலித்த மத்திய தேர்தல் ஆணையம், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அளிக்க இருந்த கட்சியின் பெயரை நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, ‘நடிகர் விஜய் செய்த புகாரில் நியாயம் இருப்பதால் அவரது தந்தை சந்திரசேகருக்கு அளிக்க இருந்த ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ எனும் கட்சியின் பெயர் கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து சந்திரசேகருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், விஜய் பெயரில்லாத வேறு மூன்று பெயர்களை அனுப்பும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தன.
இந்நிலையில், மகனை சமாதானப் படுத்தும் முயற்சியில் சந்திரசேகர் இறங்கியுள்ளார். ஒருவேளை தனது முடிவில் விஜய் மனம் மாறவில்லை எனில், புதிய கட்சி தொடங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பது கேள்விக்குறியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT