Published : 19 Jan 2021 05:40 PM
Last Updated : 19 Jan 2021 05:40 PM
நாட்டின் துயரம் மெல்ல அதிகரித்துப் பரவி வருகிறது. தேசத்தின் வேளாண் துறையை அழிக்கவே வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைத் திரும்பப் பெறுவதுதான் தீர்வு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மத்திய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒரு புத்தகத்தை இன்று காங்கிரஸ் கட்சி, தலைமை அலுவலகத்தில் வெளியிட்டது. இந்த நூலை வெளியிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நாட்டில் மிகப்பெரிய சோகம் பரவி வருகிறது. ஆனால், இந்த சோகத்தை மத்திய அரசு புறம் தள்ளுகிறது. இந்த சோகம் குறித்த உண்மை நிலவரத்தை மறைத்து மக்களிடம் தவறான தகவல்களை மத்திய அரசு பரப்புகிறது. உண்மை என்னவென்றால், இந்த சோகம் மெல்லப் பரவி வருகிறது என்பதுதான்.
நான் விவசாயிகளைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஏனென்றால், விவசாயிகளின் நிலைமையும் மிகப்பெரிய சோகத்தில் ஒரு பகுதிதான். நான் என்ன சொல்கிறேன் என்பதை நாட்டின் இளைஞர்கள் கவனமாகக் கேளுங்கள், மிகவும் முக்கியமானது.
நான் கூறுவது நிகழ்காலத்தைப் பற்றி அல்ல. எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றிப் பேசுகிறேன். இந்த தேசம் பொருளாதார ரீதியாக வலிமையான நாடு. உங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். மற்ற நாடுகளைப் போல் தனித்துச் செயல்பட முடியும்.
விமான நிலையங்கள், கட்டுமானங்கள், மின்சக்தி, தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைளையும், அதில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே வளர்ந்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.
அதாவது, 4 அல்லது 5 தொழிலதிபர்கள்தான் நாட்டைச் சொந்தமாக்கி வருகிறார்கள். ஊடகத்தின் ஆதரவுடன் பிரதமர் மோடியுடன், யார் நெருக்கமாக இருக்கிறார்களோ, அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் உதவியுடன் இருக்கும் சிலருக்குத்தான் தேசம் சொந்தமாக இருக்கிறது.
இந்தியாவில் வேளாண்மை மிகப்பெரிய தொழில். 60 சதவீத மக்கள் வேளாண் துறையில் இருக்கிறார்கள். மதிப்பின் அடிப்படையில் மிகப்பெரிய தொகை. குறிப்பிட்ட ஆதிக்கத்திடம் இருந்து பாதுகாக்கப்பட்டு வந்த வேளாண் துறை இப்போது அவர்களின் கரங்களில் சிக்க இருப்பதைப் பார்க்கிறோம்.
அதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்கள், மண்டிகளை அழித்து, அத்தியாவசியச் சட்டத்தை அழித்து இந்திய விவசாயத்தை அழித்துவிடும். எந்த இந்தியரும் நீதிமன்றத்தில் சென்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. நாட்டில் உள்ள வேளாண் துறையை அழிப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதைத் திரும்பப் பெறுவது மட்டும்தான் தீர்வு
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், சில முதலாளிகளின் கைகளில் ஒட்டுமொத்த விவசாயத் துறையும் சேர்ந்துவிடும். போராடும் விவசாயிகளுக்கு நான் 100 சதவீதம் ஆதரவு அளிக்கிறேன். இதேபோன்று ஒவ்வொருவரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT