Published : 19 Jan 2021 01:27 PM
Last Updated : 19 Jan 2021 01:27 PM
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா சிறிய கிராமத்தைக் கட்டமைத்து வருகிறது என்று பாஜக எம்.பி. பேசியது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். இங்குள்ள எல்லைப் பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சர்ச்சைக்குரிய வகையில் இருக்கிறது. எல்லைகளை வரையறுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகச் சிக்கல் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோன்று சீனா தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டாலும் அது குறித்து சீனா தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் பாஜக எம்.பி. தபிர் கவோ அளித்த பேட்டி ஒன்றில், ''அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் 100 வீடுகளைக் கொண்ட சிறிய கிராமத்தை சீனா கட்டமைத்து வருகிறது. இந்த கிராமத்தில் சிறிய வணிக வளாகம், சாலைகள் கடந்த ஆண்டு முதல் அமைக்கப்பட்டு வருகின்றன'' எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “பாஜக எம்.பி. தபிர் கவோ, அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியாவுக்கு உட்பட்ட எல்லைப் பகுதியில் சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா 100 வீடுகளைக் கொண்ட கிராமத்தைக் கட்டமைத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார். அந்தக் கிராமத்தில் வணிக வளாகமும், சாலையும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி.யின் கூற்று உண்மையாக இருந்தால், சர்ச்சைக்குரிய பகுதியை மீறி, அங்கு நிரந்தரமாக சீன மக்களை சீன ராணுவம் குடியமர்த்த முயல்வது தெளிவாகிறது. இந்த அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் குறித்து மத்திய அரசு என்ன சொல்லப்போகிறது?
சீனாவுக்கு மற்றொரு நற்சான்று அளிக்கப்போகிறதா மத்திய அரசு அல்லது, குழப்பமான விளக்கத்தை அளித்து கடந்த கால அரசுகள் மீது பழி சுமத்தப்போகிறீர்களா?''
இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT