Last Updated : 19 Jan, 2021 12:52 PM

2  

Published : 19 Jan 2021 12:52 PM
Last Updated : 19 Jan 2021 12:52 PM

வேளாண் சட்டங்கள்: மத்திய அரசு- விவசாயிகள் இடையிலான 10-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைப்பு

கோப்புப் படம்.

புதுடெல்லி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக விவசாயிகள் அமைப்பினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே 10-வது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருந்த நிலையில், அது நாளைக்கு (20-ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து, விவசாயிகள், மத்திய அரசு இடையே நிலவும் சிக்கலைத் தீர்க்க சமரசக் குழுவையும் நியமித்துள்ளது.

இந்த வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே இதுவரை 9 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், இதுவரை எந்த உறுதியான தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் 19-ம் தேதி 10-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சகம் நேற்று இரவு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், “விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே வேளாண் சட்டங்கள் தொடர்பாக 10-வது சுற்றுப் பேச்சுவார்த்தை 19-ம் தேதி நடப்பதாக இருந்தது.

அந்தப் பேச்சுவார்த்தை ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு, 20-ம் தேதி (புதன்கிழமை) நடக்கும். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 20-ம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் பேச்சுவார்த்தை தொடங்கும். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிகள் கலந்துகொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் மத்திய அரசு நல்ல முயற்சிகளை, திட்டங்களை முன்னெடுக்கிறதோ அப்போதெல்லாம் தடைகள் உருவாகின்றன. வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காக கொண்டுவரப்பட்டவை. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது இரு தரப்பு விருப்பமாகவே இருந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே வேளாண் சட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்க 4 பேர் கொண்ட சமரசக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழுவில், “பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோர் இடம் பெற்றனர். இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. அதனால் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை ஒருநாள் ஒத்திவைத்ததா மத்திய அரசு என்ற கேள்வியும் எழுகிறது.

இதில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான் சமரசக் குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக கடந்த வாரம் தெரிவித்து, அதற்கான கடிதத்தையும் அனுப்பினார். இதனால், பூபேந்தர் சிங் மான் அந்தக் குழுவில் தொடர்ந்து செயல்படுவாரா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

மத்திய வேளாண் இணையமைச்சர் புர்ஷோத்தம் ரூபாலா கூறுகையில், ''விவசாயிகள் எங்களிடம் நேரடியாகப் பேசினால் அது வேறு மாதிரியாக இருக்கும். விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் நேரடியாகப் பேசினால் அதன் முடிவும் வேறு மாதிரியாக இருக்கும். விவசாயிகளுடன் நேரடியாகப் பேசும்போது, விரைவாகத் தீர்வு கிடைக்க வேண்டும்'' என்றனர்.

ஆனால், தற்போது பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் போராட்டத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு உரிய வழியில் தீர்வு கேட்கிறார்கள். இரு தரப்பிலும் தீர்வுக்காக முயல்கிறார்கள். ஆனால், வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகும்போது, தீர்வு கிடைக்க அதிகமான காலம் ஆகிறது. ஆனால், இறுதியான தீர்வு கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x