Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM
பெலகாவியை மகாராஷ்டிராவுடன் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். இதற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மகாராஷ்டிர எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டம் கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது. இங்கு மராத்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்வதால் பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. பெலகாவியை மகாராஷ்டிராவுடன் சேர்க்கக் கோரும் வழக்கும் உச்ச நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மராத்திய எல்லைப் போராட்ட தியாகிகள் தினத்தை முன்னிட்டு கடந்த 17-ம்தேதி மகாராஷ்டிர முதல்வர்உத்தவ் தாக்கரே பேசும்போது,‘‘கர்நாடகாவுடன் இணைக்கப்பட்ட பெலகாவி உள்ளிட்ட மராத்தியர்கள் வசிக்கும் பகுதிகளை மீண்டும் மகாராஷ்டிராவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிதறி வாழும் மராத்தியர்களையும், பிரிந்து போன மண்ணையும் மீட்பதுதான் எல்லைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்'' என்றார்.
உத்தவ் தாக்கரேவின் இந்த கருத்து கர்நாடகாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எடியூரப்பா கூறும்போது, "உத்தவ் தாக்கரேவின் கருத்து இந்திய கூட்டாட்சி அமைப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. முதல்வர் பொறுப்பில் இருக்கும் அவர் கூட்டாட்சி தத்துவத்தை மதிக்க வேண்டும். இரு மாநில எல்லை விவகாரத்தில் மகாஜன் கமிஷன் அளித்த அறிக்கையே இறுதியானது. அதனால் பெலகாவி கர்நாடகாவுக்கு சொந்தமானது'' என்றார்.
சித்தராமையா கூறும்போது, "உத்தவ் தாக்கரே தான் முதல்வர் என்பதை மறந்துவிட்டு, சிவசேனா தொண்டரைப் போல பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது'' என்றார்.
இதனிடையே உத்தவ் தாக்கரேவை கண்டித்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பெலகாவி, பெங்களூரு ஆகிய இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது 'பெலகாவி கர்நாடகாவுக்கே சொந்தம்' என முழக்கம் எழுப்பிய அவர்கள், உத்தவ் தாக்கரேவின் உருவப் படத்தை தீயிட்டு கொளுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT