Published : 18 Jan 2021 04:21 PM
Last Updated : 18 Jan 2021 04:21 PM
நிதிஷ் குமாரின் ஆட்சியில் குற்றவிகிதம் அதிகரித்து இரட்டிப்பாகியுள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பிஹாரில் சமீபகாலமாகவே குற்றவிகிதம் அதிகரித்து வருவதாக ஓர் ஊடகம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை மேற்கோள் காட்டி பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இன்றைய தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
முதல்வர் நிதீஷ் குமார் ஆட்சியில் பெருமைப்பட ஒன்றுமில்லை. பிஹரில் எங்கள் ராஷ்டிரிய ஜனதா தள அரசாங்கத்தின் கடைசி ஆண்டில் 2004ல் மொத்தம் 1,15,216 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில் நிதிஷ் குமார் தனது அரசாங்கத்தில் பொறுப்பேற்ற 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டில் மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 2,69,096 ஆக அதிகரித்துள்ளது.
இது இரு மடங்கிற்கும் அதிகமாகும். குற்றம் இரட்டிப்பாகியுள்ளது, அப்படியெனில் நிதிஷ்குமார் ஆட்சி நல்லாட்சியா, இவரது ஆட்சியில்தான் குற்ற விதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 12 ஆம் தேதி பாட்னாவின் புனைச்சக் பகுதியில் அடையாளம் தெரியாத பைக் மூலம் வந்தவர்களால் இண்டிகோ விமான நிறுவன மேலாளர் ரூபேஷ் குமார் சிங் கொலை செய்யப்பட்டதிலிருந்து, மாநிலத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் தொடர்ந்து பிஹார் அரசை விமர்சித்து வருகிறது.
தேஜஸ்வி குற்றச்சாட்டு
நேற்று முன்தினம் (ஜனவரி 16 ம் தேதி), பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''நாட்டின் குற்றத் தலைநகராக பிஹார் மாறி வருகிறது, மாநிலத்தில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்.
ரூபேஷ் குமார் சிங் கொலை செய்யப்பட்டபோது, குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் நிதீஷ் குமார் ஓர் அறிக்கையை வெளியிடுகிறார். அவர் யாரிடம் முறையீடு செய்கிறார். அவர் தொடர்ந்து 16 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வருகிறார், மேலும் உள்துறை துறையையும் தனது இலாகாவில் வைத்திருக்கிறார். அவர் யாரை எதிர்த்து முறையிடுகிறார்?'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT