Published : 18 Jan 2021 02:36 PM
Last Updated : 18 Jan 2021 02:36 PM
டெல்லியில் வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி போலீஸார் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி போலீஸாரின் சட்டம்- ஒழுங்கு விவகாரம் எனக் கூறி வரும் 20-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து, விவசாயிகள், மத்திய அரசு இடையே நிலவும் சிக்கலைத் தீர்க்க சமரசக் குழுவையும் நியமித்துள்ளது.
இந்தச் சூழலில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று, அணிவகுப்பு நடக்கும் ராஜபாதையில், டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசு சார்பில் டெல்லி காவல்துறை மூலம் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அதில், ''குடியரசு தினத்தன்று விவசாயிகளில் ஒரு தரப்பினர், அணிவகுப்பு நடக்கும் இடத்தில் டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக உளவுப் பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு டிராக்டர் பேரணி நடத்துவது குடியரசு தினக் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கும். தொந்தரவுக்கு ஆளாக்கும்.
அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தும். நாட்டுக்கே மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தும். போராட்டம் செய்வதற்கு உரிமை இருக்கிறது.
ஆதலால், டிராக்டர் பேரணி நடத்தத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும். டிராக்டர் பேரணி மட்டுமல்லாது, வாகன அணிவகுப்பு, பேரணி என எந்தவகையிலும் டெல்லி தலைநகர் பகுதியில் நடத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்கெனவே கடந்த 11-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லி போலீஸார் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், எல்.என்.ராவ், வினீத் சரண் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்புகையில், “டெல்லி போலீஸாருக்கு என்னென்ன அதிகாரிகள் இருக்கின்றனர், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் கூற வேண்டுமா. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சொல்லப்போவதில்லை.
டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நுழைவது என்பது டெல்லி காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு விவகாரம். இதை போலீஸார்தான் தீர்மானிக்க வேண்டும். டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது போலீஸார். அவர்கள்தான் முதல் அதிகாரம் படைத்தவர்கள். நீதிமன்றம் அல்ல. உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறது.
ஆனால், போலலீஸாரின் அதிகாரிகள் குறித்து நாங்கள் ஏதும் கூறமாட்டோம். இதைத் தீர்மானிக்க வேண்டிய அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது. ஆதலால், இந்த வழக்கை நாங்கள் ஒத்திவைக்கிறோம். வரும் 20-ம் தேதிக்கு மீண்டும் விசாரிக்கிறோம்” என உத்தரவிட்டது.
மேலும், நீதிபதிகள் அமர்வு, அட்டர்னி ஜெனரலிடம், ''விவசாயிகள் தரப்பில் யாரேனும் ஆஜராகியுள்ளார்களா'' எனக் கேள்வி எழுப்பியது.
அதற்கு சில விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான துஷ்யந்த் தவே ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சில விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறுகையில், “வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் அனைத்து உறுப்பினர்களையும் மாற்றிவிட்டு புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். 4 பேருமே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள். இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்ஏ. பாப்டே, “ஒவ்வொரு மனுவாக வரும் நாட்களில் நாங்கள் விசாரிக்கிறோம். இதே அமர்வு அனைத்து மனுக்களையும் விசாரிக்கும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT