Published : 18 Jan 2021 12:13 PM
Last Updated : 18 Jan 2021 12:13 PM
வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்க்க உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழு நாளை முதல்முறையாகக் கூடுகிறது. இந்தத் தகவலை அந்தக் குழுவில் உள்ள அனில் அகர்வால் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதித்து கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
அந்தக் குழுவில், “ பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசியஇயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோர் இடம் பெற்றனர்.
இதில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான் அந்த குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக கடந்த வாரம் தெரிவித்து, அதற்கான கடிதத்தையும் அனுப்பினார். இதனால், பூபேந்தர் சிங் மான் அந்த குழுவில் தொடர்ந்து செயல்படுவாரா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இந்த சூழலில் ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி ஆகிய 3 உறுப்பினர்களும் 19-ம் தேதி முதல்முறையாகச் சந்திக்க உள்ளனர்.
இதுகுறித்து ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட் நிருபர்களிடம் கூறுகையில் “உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் உள்ளவர்கள் ஜனவரி 19-ம்தேதி டெல்லியில் புசா வளாகத்தில் முதல்முறையாகச் சந்திக்க இருக்கிறோம்.
அடுத்த நடவடிக்கை குறித்து உறுப்பினர்கள் மட்டுமே கூடி ஆலோசிக்க இருக்கிறோம். பூபேந்திர சிங் மான் குழுவில் விலகியுள்ளாதாகத் தெரிவித்த நிலையில், புதிதாக யாரையும் உச்ச நீதிமன்றம் நியமிக்கவில்லை.
வரும் 21-ம் தேதியிலிருந்து குழு வழக்கமாகச் செயல்படும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விதிமுறைகள் வந்துள்ளன. விவசாயிகளும், மத்திய அரசும் ஒருபுறம் பேச்சு நடத்தும்போது, நாங்கள் அவர்களுடன் தனியாகப் பேச்சுநடத்துவதில் எந்த சிக்கலும்இல்லை.
நமக்குத் தேவைத் தீர்வுதான். எங்கள் முயற்சியால் அல்லது அரசின் பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தால் நல்லதுதான். அரசு சார்பிலும் பேச்சு வார்த்தை நடக்கட்டும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை நாங்கள் செய்வோம் ” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT