Published : 18 Jan 2021 11:13 AM
Last Updated : 18 Jan 2021 11:13 AM
யாருக்கெல்லாம் கரோனா தடுப்பூசி இலவசமாகக் கிடைக்கும், ஏழைகள், விளிம்புநிலையில் இருக்கும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இருக்கிறதா, அப்படியென்றால் அந்தத் திட்டம் என்ன என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசு கரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதுவரை கடந்த இரு நாட்களில் ஏறக்குறைய 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் இலவசமாக வழங்கப்பட திட்டம் இருக்கிறது என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
கரோனா தடுப்பூசி போடும் முதல் கட்டத்தில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 81.35 கோடி மக்கள் உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் பொருட்களைப் பெற்று வருகிறார்கள், இது பற்றி மத்திய அரசுக்கு தெரியுமா.
பட்டியலித்தவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், ஓபிசி, வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்போர், வறுமைக் கோட்டுக்கு மேல் வசிக்கும் மக்கள், ஏழைகள் ஆகியோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படுமா.
அவ்வாறு இலவசமாக போடப்படும் என்றால், என்ன திட்டத்தை மத்திய அரசு வைத்திருக்கிறது. எப்போது இருந்து தடுப்பூசி போடப்படும், எங்கிருந்து தடுப்பூசி வாங்கப்படும் இந்த கேள்விகளுக்கு மத்தியில் ஆளும் நரேந்திரமோடி அரசு பதில் அளிக்க வேண்டும்.
கரோனா தடுப்பூசி மருந்தின் செயல்பாடு, அதன் பக்கவிளைவுகள் குறித்து பெரும்பாலானோருக்கு சந்தேகம் இருக்கிறது. இதனால்தான், உலகளவில் நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், அதிபர்கள், அமைச்சர்கள் தாங்களே முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். ஆதலால், எம்.பி.க்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுமா என்பதில் எந்த கருத்தும் காங்கிரஸுக்கு இல்லை.
1.65 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் வி.ஜி. சோமணி தெரிவித்துள்ளார். ஒரு தனிநபருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்படும் என்றால் 82.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட முடியும். முதல் கட்டத்தில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி முதலில் தெரிவித்தார்.
எஞ்சிய 135 கோடி மக்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும். அவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்குமா? என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை (ஒரு டோஸ்) ரூ.200க்கு வழங்குகிறது. லாப நோக்கம் கருதாமல் தடுப்பூசியை விநியோகம் செய்வதாக அந்நிறுவனம் சொல்கிறது. ஆனால் சீரம் நிறுவனம் தடுப்பூசியை ரூ.158க்கு வழங்குவதாக பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு தனது தடுப்பூசியை ரூ.200க்கு ஏன் விற்பனை செய்கிறது?
மற்றொரு தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை ஒரு டோசுக்கு ரூ.295க்கு வழங்குகிறது. இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் உதவியுடன் இந்த தடுப்பூசியை தயாரிக்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. முதல் கட்டத்தில் 375 பேருக்கும், இரண்டாவது கட்டத்தில் 380 பேருக்கும் மட்டுமே கோவாக்ஸின் வழங்க நிறுவனத்துக்கு அனுமதி உள்ளது.
மேலும் முன்றாம் கட்ட சோதனை முடிவுக்காக பாரத் பயோடெக் காத்திருக்கிறது. ஏற்கெனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தடுப்பூசிக்கு (கோவிஷீல்ட்) ரூ.200 மட்டுமே செலவாகும் போது, இதற்கு (கோவாக்சின்) ஏன் கூடுதல் செலவாகிறது?
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT