Published : 18 Jan 2021 10:21 AM
Last Updated : 18 Jan 2021 10:21 AM

அப்துல் கலாம் விட்டு சென்ற தன்னம்பிக்கை தான் நமது விஞ்ஞானிகளை சொந்த தடுப்பூசி உருவாக்க தூண்டியுள்ளது: வெங்கய்ய நாயுடு

புதுடெல்லி

அப்துல் கலாம் விட்டு சென்ற, தன்னம்பிக்கை என்ற பாரம்பரியம்தான், இன்று நமது விஞ்ஞானிகளை சொந்த தடுப்பூசி உருவாக்க தூண்டியுள்ளது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்கை வரலாறு புத்தகத்தை, ‘‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’’ என்ற தலைப்பில் அவரது அண்ணன் மகள் டாக்டர் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர் மற்றும் பிரபல விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த புத்தகத்தை சென்னையில் உள்ள ராஜ்பவனில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். இந்த புத்ததக்தை தமிழில் எழுதியதற்காக, அவர் பாராட்டு தெரிவித்தார். பெரும்பாலான மக்களை சென்றடைய, தாய் மொழியில் எழுதுவதுதான் சிறந்தது என அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

இந்தியாவின் மக்கள் ஆற்றும் பணிகள்தான், இந்தியாவின் மிகப் பெரிய பலங்களில் ஒன்று. வரும் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய, வேளாண் முதல் உற்பத்தி வரை அனைத்து துறைகளிலும், வேகமான முன்னேற்றத்திற்கு இந்திய மக்களின் பணியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

நாட்டின் 65 சதவீத மக்கள், 35 வயதுக்கு கீழ் உள்ளனர். 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளனர். எனவே, வளர்ச்சியை அதிகரிக்க நாட்டின் இளைஞர்கள் முன்னணியில் இருக்க வேண்டிய நேரம் இது. இளைஞர்கள், டாக்டர் அப்துல் கலாமின் புத்தகத்தை படித்து, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைகளை உருவாக்குபவர்களாக மாற இளைஞர்கள் விரும்ப வேண்டும்.

கல்வி கற்பதை, ஆரம்ப கல்வியிலிருந்து சுவாரஸ்யமான அனுபவமாக மாற்ற, நமது கல்வி முறையை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும். கேள்வி கேட்கவும், விவேகமாக சிந்திக்கவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதற்கு புதிய கல்வி கொள்கை வழி வகுக்கிறது. இது குழந்தையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது.

இளைஞர்களின் மனதை தூண்டுவதில் டாக்டர் கலாம் ஆர்வமாக இருந்தார். மாணவர்களுடன் உரையாட, அவர் எப்போதும் பள்ளிகளுக்கு சென்றார். அவர் தனது பேச்சு மற்றும் உற்சாகமான புன்னகை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஊக்கப்படுத்தினார். சமூக நலன் மற்றும் வளர்ச்சிக்கு, தொழல்நுட்பம் பயன்படுத்தப்படுவதில், அவர் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். நமது விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் தற்சார்பு இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருமை உண்மையில் டாக்டர் அப்துல் கலாமை சேரும்.

டாக்டர் அப்துல் கலாம் விட்டு சென்ற, தன்னம்பிக்கை என்ற பாரம்பரியம்தான், இன்று நமது விஞ்ஞானிகள் சொந்த தடுப்பூசி உருவாக்க தூண்டியுள்ளது. மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை கூட நாம் சுமாராக தொடங்கி, இன்று பிபிஇ உடைகள், என் 95 முக கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். கோவிட்-19 தடுப்பூசிக்காக அயராது உழைத்த விஞ்ஞானிகளுக்கும், அரசுக்கும் பாராட்டுக்கள்.

வெல்ல முடியாத உணர்வு, துரதிருஷ்ட காலத்திலும் தளராத மனப்பான்மை ஆகியவற்றுக்காக டாக்டர் அப்துல் கலாம், எப்போதும் நினைவு கூறப்படுவார். ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையுடன் அவர் வாழ்ந்தார்.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x