Last Updated : 17 Jan, 2021 06:52 PM

4  

Published : 17 Jan 2021 06:52 PM
Last Updated : 17 Jan 2021 06:52 PM

ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள மோடிக்கு இங்கிலாந்து அழைப்பு: முன்னதாக போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வர வாய்ப்பு

பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் | பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

அதற்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து இன்று டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது. கரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி தொடர்பான இந்தியாவின் முயற்சிகளுக்கு இங்கிலாந்து பாராட்டுக்கள். இந்தியா ஏற்கனவே உலகின் 50 சதவீத தடுப்பூசிகளை வழங்கியுள்ளது, மேலும் இங்கிலாந்து மற்றும் இந்தியா தொற்றுநோய் முழுவதும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு இங்கிலாந்து நடத்தப்போகும் மாநாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த தலைவர்களை விருந்தினர் நாடுகளாக கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் இந்த மாநாட்டில் விருந்தினராக இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக அவர் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி-7 மாநாடு கார்ன்வால் கடற்கரையில் உள்ள ஓர் கிராமத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது. முன்னணி தொழில்துறை நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கான தளமாக இக்கிராமம் அமைந்துள்ளது.

இம்மாநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முக்கிய அம்சமாக கோவிட் 19 நோய்த் தொற்றிலிருந்து பசுமை மீட்புக்கு ஊக்குவிப்பார்.

இந்த மாநாட்டில் கரோனா வைரஸை வெல்வது மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிப்பது முதல், திறந்த வர்த்தகம் மூலம் எங்குள்ள மக்களும் பயனடைவதை உறுதி செய்வது, மாறிவரும் தொழில்நுட்ப மாற்றம் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்பு ஆகிய பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஜி-7 குழுவில் உலகின் ஏழு முன்னணி ஜனநாயக பொருளாதார நாடுகளான - இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளோடு ஐரோப்பிய ஒன்றியமும் கலந்துகொள்ளும்.

இவ்வாறு டெல்லியில் உள்ள இங்கிலாந்து நாட்டின் தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x