Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

32 தமிழக பேருந்துகள் ஆந்திராவில் சிறைபிடிப்பு: முறையான ஆவணங்கள் இல்லை என கூறி நடவடிக்கை

கோப்புப் படம்

திருப்பதி

தமிழகத்தில் இருந்து வந்த 32 அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி ஆந்திர மாநில அதிகாரிகள் சிறை பிடித்தனர்.

தமிழகம் - ஆந்திரா இடையேஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. கரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து இந்த மாநிலங்களுக்கும் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதி,நெல்லூர், சித்தூர் உள்ளிட்ட பல ஆந்திர பகுதிகளுக்கும், திருப்பதியில் இருந்து சென்னை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, மதுரை உள்ளிட்ட பலஊர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு திருப்பதியில் இருந்து வேலூர் சென்ற 6 ஆந்திர அரசு பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்த பேருந்துகளை அதிகாரிகள் சிறைபிடித்தனர்.

இதன் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து திருப்பதி, பலமநேர்,குப்பம், சித்தூர் போன்ற ஊர்களுக்கு வந்த 28 அரசுப் பேருந்துகள் மற்றும் 4 தனியார் பேருந்துகளை ஆந்திர போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். போதிய ஆவணங்கள் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள்தெரிவித்தனர். பேருந்துகளை அதிகாரிகள் சிறைபிடித்ததால் அவற்றில் பயணம் செய்த பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். இதனால், அவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பேருந்துகளை விடுவிப்பது தொடர்பாக இரு மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x