Published : 16 Jan 2021 05:26 PM
Last Updated : 16 Jan 2021 05:26 PM
கரோனா தொற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் காட்டிய அதே பொறுமையை தடுப்பூசியை எடுத்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
தேசிய அளவிலான கோவிட்- 19 தடுப்பூசித் திட்டத்தைக் காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்த பிறகு பேசுகையில் பிரதமர் மோடி கூறியதாவது:
மனித நேயத்தையும், முக்கிய கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அத்தியாவசிய தேவை உள்ள நபர்களுக்கு முதலாவதாக தடுப்பூசி வழங்கப்படும். தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களுக்கு முதலில் தடுப்பூசி அளிக்கப்படும். நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கான முதல் உரிமை இருக்கிறது.
அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த மருத்துவமனைகளுக்கு இந்த முன்னுரிமை அளிக்கப்படும்.
மருத்துவ பணியாளர்களைத் தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கில் அங்கம் வசிப்பவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும். நமது பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த எண்ணிக்கை சுமார் 3 கோடி அளவில் இருக்கும் என்றும், அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான செலவை இந்திய அரசே ஏற்கும்.
இந்தத் தடுப்பூசித் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை விரிவாக எடுத்துரைத்த பிரதமர், இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் தடுப்பூசிகளை மக்கள் கட்டாயம் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். இரண்டு கட்டங்களுக்கும் இடையே ஒரு மாத இடைவெளி இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இரண்டாம் கட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு 2 வாரங்கள் கழித்தே தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் ஏற்படும் என்பதால் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கரோனா தொற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் காட்டிய அதே பொறுமையை தடுப்பூசியை எடுத்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும்.
நாடு முழுவதும் தடுப்பு மருந்து வழங்கும் இந்த திட்டம் உலகத்திலேயே மிகப்பெரிய தடுப்பு மருந்து செயல்முறையாகும்.
வரலாறு காணாத இந்த நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர், முதல் சுற்றிலேயே மூன்று கோடி மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும். இது உலகத்தின் குறைந்தது 100 நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.
இரண்டாம் சுற்றில் 30 கோடி பேர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும். வயது முதிர்ந்தோர் மற்றும் இணை நோய் தன்மை உடையவர்களுக்கு இந்த சுற்றின்போது தடுப்பு மருந்து வழங்கப்படும். இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே 300 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது.
இந்த அளவிலான தடுப்புமருந்து வழங்கல் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளபபடவில்லை என்றும் இந்தியாவின் திறனை இது வெளிப்படுத்துகிறது.
வதந்திகள் மற்றும் தவறான பிரசாரங்களை நம்ப வேண்டாம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மீது விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் முழுவதும் திருப்தி அடைந்த பின்னரே அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்திய தடுப்பு மருந்து விஞ்ஞானிகள், மருத்துவ அமைப்பு, இந்திய செயல்முறைகள் மற்றும் அமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் உலகளாவிய நம்பிக்கையை பெற்று இருக்கின்றன. தொடர் சாதனைகள் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது. உலகெங்கிலும் இருக்கும் 60 சதவீத குழந்தைகள் கடும் அறிவியல் பரிசோதனைகளுக்கு பிறகு இந்தியாவில் தயாரிக்கப்படும் உயிர் காக்கும் தடுப்பு மருந்துகளை பெறுகின்றனர்.
இந்திய தடுப்பு மருந்து நிபுணத்துவம் மற்றும் இந்திய தடுப்புமருந்து விஞ்ஞானிகள் மீதான இந்த நம்பிக்கை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தின் மூலம் இன்னும் வலுப்பெறும்.
இந்திய தடுப்பு மருந்துகள் வெளிநாட்டு தடுப்பு மருந்துகளை விட விலை குறைவாக இருப்பதோடு அவற்றை செலுத்துவதும் எளிதானது. சில வெளிநாட்டு தடுப்பு மருந்துகளின் விலை ரூபாய் ஐந்தாயிரம் வரை இருப்பதாகவும், -70 டிகிரி தட்ப வெப்ப நிலையில் அவற்றை சேமித்து வைக்கவேண்டும்.
ஆனால், பல்லாண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்திய தடுப்பு மருந்துகள், இந்திய தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு தக்க வகையில் உள்ளதாகவும் கரோனாவுக்கு எதிரான நமது போரில் நாம் வெற்றி அடைவதற்கு இவை உதவும்.
தன்னம்பிக்கை மற்றும் தற்சார்புடன் கரோனாவை இந்தியா எதிர் கொண்டதாக மோடி கூறினார். நம்பிக்கையை வலுவிழக்க செய்ய கூடாது என்னும் உறுதி ஒவ்வொரு இந்தியரிடமும் இருந்தது. ஒரே ஒரு ஆய்வகத்தில் இருந்து 2300 ஆய்வகங்களாக வளர்ச்சி அடைந்து இருப்பது, முகக் கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுவாசக் கருவிகளின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததோடு ஏற்றுமதிகளையும் செய்து வருகிறது.
தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் போதும் அதே அளவு தன்னம்பிக்கை மற்றும் தற்சார்பை மக்கள் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT