Published : 16 Jan 2021 11:56 AM
Last Updated : 16 Jan 2021 11:56 AM
கரோனாவுக்கு எதிரான போரில் நமது வெற்றியை தடுப்பூசி உறுதிப்படுத்தும், கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி கூறினார்.
கரோனா வைரஸ்தடுப்பூசி தயாரிக்கும் பணிகள், பல்வேறு நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
கோவிஷீல்டு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்குதொடங்கி வைத்தார். பின்னர், நாட்டு மக்களிடையே காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது
உலகம் முழுதும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகியுள்ளது. குறைந்த காலத்தில் இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு பாராட்டு. நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது.
தடுப்பூசி மருந்துக்காக அனைத்து விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர். விஞ்ஞானிகள் உழைப்பால் குறைந்த காலத்தில் 2 தடுப்பூசி கிடைத்துள்ளது.
நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்.
முதல் கட்டமாக அடுத்த 2-3 மாதங்களில் 3 கோடிபேருக்கு தடுப்பூசி போடப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், கரோனாவிற்கு எதிரான நமது போர் தொடர்கிறது. 2 டோஸ் தடுப்பூசி போடுவது கட்டாயம். ஒரு மாத கால இடைவெளியில் இரண்டு டோஸ்களை செலுத்தி கொள்ள வேண்டும்.
கரோனாவுக்கு எதிரான போரில் நமது வெற்றியை தடுப்பூசி உறுதிப்படுத்தும். மற்ற தடுப்பூசிகளை காட்டிலும், இந்திய தடுப்பூசிகளை பாதுகாப்பது எளிது.
கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்திய தடுப்பூசி விலை குறைவு. முதல் டோஸ் போட்டவுடன், மாஸ்க்குகளை கைவிடக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தொடர வேண்டும். இரண்டாவது டோஸ் போட்ட உடன் தான் எதிர்ப்பாற்றல் நமது உடலில் உருவாகும்.
தடுப்பூசியை உருவாக்கி இருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. மனித குலம் நினைத்துவிட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT