Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தலைவர் சார்பில் பத்ம விருதுகள் அளிக்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஆகிய விருதுகள் நாட்டின் இரண்டாவது உயரிய விருதுகளாக உள்ளன. இந்த விருதுகளை பெறுபவர்களின் பெயர் பட்டியல், குடியரசு தினத் துக்கு ஒரு நாள் முன்னதாக மாலையில் அறிவிப்பது மரபாக உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு மாதங்களில் குடியரசு தலைவரால் அவரது மாளிகையில் அளிக்கப்படும்.
கடந்த ஆண்டு ஜனவரி 25-ல்2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற்றவர்களின் 141 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. இறந்த பிறகு அறிவிக்கப்பட்ட விருதுகளில் முன்னாள் மத்திய அமைச்சர்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பாரிக்கர் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் இருந்தனர்.
இந்த விருதுகள் வழங்குவதற்கு முன்னர், நாடு முழுவதும் கரோனா பரவத் தொடங்கி விட்டது. இதனால், குடியரசு தலைவர் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கான அறிவிப்பு குறித்த நாளில் வெளியாகும். கரோனா பரவல் முடிந்து நிலைமை சரியான பின்பே விருதுகள் நேரில் அழைத்து வழங்கப்படும். நிலைமை சரியான பின் கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விருதுகள் முன்னதாக வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன’’ என்று தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் அதை நேரில்வந்து குடியரசு தலைவர் கைகளால் பெற அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சந்தோஷ்பாபு உட்பட 20 பேருக்கு பரம்வீர் சக்ரா விருது எப்போது?
என்.மகேஷ்குமார்
ஹைதராபாத்: லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் 15-ம்தேதி மோதல் ஏற்பட்டது. இதில் தெலங்கானாவை சேர்ந்த கமாண்டர் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இவர்களில் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி மற்றும் அவரது மனைவி சந்தோஷிக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு உயரிய விருதாக கருதப்படும் பரம் வீர் சக்ரா விருதை வீர மரணமடைந்த 20 ராணுவ வீரர்களுக்கும் வழங்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT