Published : 15 Jan 2021 02:04 PM
Last Updated : 15 Jan 2021 02:04 PM
இந்திய ராணுவத்தின் பொறுமையைப் பரிசோதித்து யாரும் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது. எல்லையில் நிலவும் பிரச்சினையைத் தீர்க்க அரசியல்ரீதியாகவும், பேச்சுவார்த்தையிலும் தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன என்று தரைப்படைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தரைப்படைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நமது எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து தன்னிச்சையாக மாற்றங்கள் செய்து சதி செய்தவர்களுக்குக் கடுமையான பதிலடி தரப்பட்டுள்ளது. லடாக்கில் உள்ள கல்வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது.
எந்தவிதமான எல்லைப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம், அரசியல் செயல்பாடுகள் மூலம் தீர்த்துக்கொள்ளவே இந்தியா விரும்புகிறது. ஆனால், இந்திய ராணுவத்தின் பொறுமையைப் பரிசோதனை செய்து யாரும் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது.
எல்லையைக் காக்கும் பணியில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உயிர்த் தியாகம் ஒருபோதும் வீணாகாது. தேசத்தின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்க இந்திய ராணுவம் அனுமதிக்காது.
லடாக் எல்லையில் நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இதுவரை இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையே 8 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. பரஸ்பர மற்றும் சமமான பாதுகாப்பு நிலவும் வகையில் தொடர்ந்து இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடக்கும்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் அண்டை நாடு இன்னமும் தீவிரவாதிகளின் சொர்க்கமாகவே இருந்து வருகிறது. எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் பகுதிக்குள் தீவிரவாதிகள் 300க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று இந்தியப் பகுதிக்குள் ஊடுருவத் தயாராக இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் எல்லைப்பகுதியில் ஊடுருவல் மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. இது பாகிஸ்தானின் பாவப்பட்ட திட்டங்களின் வெளிப்பாடு. அது மட்டுமல்லாமல் ஆயுதங்களை ஆள் இல்லா விமானம் மூலம் தீவிரவாதிகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபடுகிறார்கள்''.
இவ்வாறு நரவானே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT