Published : 15 Jan 2021 08:47 AM
Last Updated : 15 Jan 2021 08:47 AM
டெல்லி அரசு சார்பில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் அகாடெமி சார்பில் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், நேற்று துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
டெல்லியில் தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பரப்பும் வகையில் முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவின் பெயரில், தமிழ் அகாடெமி சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்த அகாடெமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டார்.
தமிழ் அகாடெமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அகாடெமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானம் வழங்கி கவுரவிக்கப்படும்.
தமிழ் மக்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும், தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என டெல்லி ஆம் ஆத்மி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி தமிழ் அகாடெமிக்கு இன்னும் தனியாக அலுவலகங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து, தமிழர் திருநாளான தைத்திருநாளான நேற்று தமிழ் அகாெடமி சார்பில் பொங்கல் பண்டிகை துணை முதல்வர்மணிஷ் ஷிசோடியா இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
தமிழ் கலாச்சாரத்தை போற்றும் கலை நிகழ்ச்சிகள், மங்கல இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கிராமியக் கலை நிகழ்ச்சிகள் போன்றவை இடம் பெற்றன. மணிஷ் ஷிசோடியா இல்லத்தில் தமிழர் முறைப்படி பொங்கல் வைக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி பொங்கலோ பொங்கல் என முழங்கி கொண்டாடப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
துணை முதல்வர் மணிஷ் ஷிசோடா, அவரின் குடும்பத்தினர் , தமிழர்கள் ஏராளமானோர் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அவர்களை தமிழ் அகாடெமியின் தலைவர் ராஜா வரவேற்றார்.
பொங்கல் பண்டிகையில் பங்கேற்றது குறித்து துணை முதல் ஷிசோடியா அளித்த பேட்டியில், “ டெல்லி எப்போதுமே பன்முகக் கலாச்சாரம் நிறைந்த நகரம். பன்முகதன்மை, பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் கலாச்சார செழிப்பான நகரம்
இதுபோன்ற பண்டிகை கொண்டாட்டம் என்பது, ஒற்றுமையின் வெளிப்பாடு, மக்களை ஒன்று சேர்ந்து வாழவைக்கும். தமிழ் அகாடெமி சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையில் தமிழ் மக்களோடு சேர்ந்து நானும் கொண்டாடினேன்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT