Last Updated : 15 Jan, 2021 08:20 AM

1  

Published : 15 Jan 2021 08:20 AM
Last Updated : 15 Jan 2021 08:20 AM

ஆளுநர் மாளிகை முற்றுகை: விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடுமுழுதும் காங்கிரஸ் பேரணி: டெல்லியில் ராகுல் காந்தி பங்கேற்பு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி


விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள ஆளுநர், துணை நிலை ஆளுநர்ர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் இன்று பேரணி நடத்துகின்றனர். டெல்லியில் நடைபெறும் பேரணி ராகுல் காந்தி தலைமையில் நடைபெற உள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதற்காக நாடுமுழுவதும் 2 கோடி விவசாயிகளிடம் இந்த சட்டத்துக்கு எதிராகப் பெறப்பட்ட கையொப்பத்தை கடந்த மாதம் குடியுரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அவர்களுடான ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கிலும் நாடு முழுவதும் இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்த உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், “ இன்றைய தினத்தை விவசாயி உரிமைகள் தினமாக கட்சி அனுசரிக்கிறது. மேலும் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தி முற்றுகையிடும்படி அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளையும் கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் துணை நிலை கவர்னர் வீடுகளில் போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கமிட்டி நடத்தும் போராட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மதுரைக்கு நேற்று வந்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்துப் பார்த்தார்.

அதன்பின் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரு அல்லது 3 நண்பர்களின் நலனுக்காக விவசாயிகளை அழிக்க சதிசெய்கிறது. விவசாயிகள் போராட்டத்தையே மத்திய அரசு புறக்கணிக்கிறது, விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள்தான் இருக்கிறார்கள். விவசாயிகளை நசுக்கினாலும், கஷ்டப்படுத்தினாலும் நாம் தொடர்ந்து வளர்ச்சி அடையலாம் என யாரேனும் நினைத்தால், நம் நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பாருங்கள்.

எப்போதெல்லாம் இந்திய விவசாயிகள் பலவீனப்பட்டார்களோ அப்போதெல்லாம் இந்தியா பலவீனமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். வேளாண் சட்டங்கள் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x