Published : 13 Jan 2021 05:20 PM
Last Updated : 13 Jan 2021 05:20 PM
யமுனா நதியில் அதிக அளவு மாசு ஏற்பட்டுள்ளது குறித்து விளக்கம் கேட்டு ஹரியாணா மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹரியாணாவிலிருந்து வரும் தண்ணீரை டெல்லி ஜல வாரியம் ஆய்வு செய்து அமோனியா உள்ளடக்கம் அதிகரித்து வருவதைக் கண்டறிந்தது. உடனே டெல்லியில் நீர் விநியோகத்தை வாரியம் நிறுத்தியது. பின்னர் உச்ச நீதிமன்றத்தை அணுகி நதியில் மாசு இல்லாத நீர் வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஒரு கோரிக்கையை வைத்தது.
டெல்லி ஜல வாரியம் (டி.ஜே.பி) குற்றம் சாட்டியதையடுத்து யமுனாவில் மாசுபடுவதை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதுகுறித்த வழக்கு விசாரணை, காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இதில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி. ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
இந்த அமர்வு கூறியதாவது:
''அதிக மாசுபடுத்தப்பட்ட நீர் ஹரியாணாவிலிருந்து யமுனா ஆற்றில் விடப்படுகிறது. டெல்லி ஜல வாரியம் தனது குற்றச்சாட்டில், யமுனா நதியில் அண்டை மாநிலமான ஹரியாணா வெளியிடும் நீரில் அதிக அம்மோனியா உள்ளிட்ட மாசுபாடுகள் உள்ளன என்றும், அவை குளோரினுடன் கலந்த பிறகு புற்றுநோயாக மாறும் என்றும் தெரிவித்திருந்தது.
யமுனா நதி முழுமையாக மாசுபட்டிருப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் வாதப் பிரதிவாதம் இன்றி இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறோம். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா இவ்வழக்கிற்குத் தேவையான உதவிகள் அளிக்க நியமிக்கப்படுகிறார். மேலும் இதுகுறித்த மனுவின் நகலை டெல்லி ஜல வாரியம் வழங்க வேண்டும். மற்றும் பதிலை தாக்கல் செய்ய ஹரியாணா மாநிலத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்''.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT