Published : 13 Jan 2021 04:12 PM
Last Updated : 13 Jan 2021 04:12 PM
இந்தியாவின் 11 நகரங்களுக்கு இன்று அதிகாலை கோவாக்சின் தடுப்பூசி மருந்து வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் 16-ம் தேதி தொடங்கும் தடுப்பூசி முகாமில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன்பின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குக் கீழான இணைநோய்கள் கொண்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. மொத்தம் 27 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, இந்தியாவின் 11 நகரங்களுக்கு இன்று அதிகாலை, கோவாக்சின் தடுப்பூசி மருந்து வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் 16.5 லட்சம் டோஸ் மருந்துகள் மத்திய அரசுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''55 லட்சம் டோஸுக்கு (ஒவ்வொரு குப்பியும் 20 டோஸ்களைக் கொண்டது) அரசு கொள்முதல் ஆணையைப் பெற்ற பிறகு, பாரத் பயோடெக் முதல் தொகுதி தடுப்பூசிகள் 11 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் கண்ணவரம் (விஜயவாடா), கவுகாத்தி, பாட்னா, டெல்லி, குருஷேத்ரா, பெங்களூரு, புனே, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் லக்னோ ஆகிய முக்கிய நகரங்களுக்கு இன்று அதிகாலை கோவாக்சின் தடுப்பூசி மருந்து வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
கோவாக்சின் என்பது இந்தியா தயாரித்த கோவிட்-19 தடுப்பூசி ஆகும். இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. கோவாக்சின் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட தடுப்பூசியாகும். கோவாக்சின் தடுப்பூசியின் 16.5 லட்சம் டோஸ் மருந்துகள் மத்திய அரசுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பூசியை மேம்படுத்துவதற்காக பொது-தனியார் கூட்டாண்மை எனும் மைல்கல்லை வெற்றிகரமாக உருவாக்கியதற்காக அனைத்து மருத்துவ சோதனை தன்னார்வலர்களுக்கும், கூட்டாளர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி''.
இவ்வாறு பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT