Last Updated : 13 Jan, 2021 03:14 AM

1  

Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ரூ.100 கோடி மோசடி செய்த கும்பல் நொய்டாவில் கைது

புதுடெல்லி

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்து வந்த கும்பலை தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சு.ராஜேஷ் நொய்டாவில் நேற்று கைது செய்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு ‘ரிங்கிங்பெல்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய மோஹித் கோயல் என்பவர், ரூ.251-க்கு ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக அறிவித்தார். இதில் பல கோடி மோசடி நடைபெற்றது. இதுதொடர்பான புகாரின் பேரில், அந்நிறுவனம் மூடப்பட்டு மோஹித் கைதானார். 2017-ல் ஜாமீனில் விடுதலையான அவர், மீண்டும் ஒரு நிறுவனத்தை தொடங்கி, ரூ.2,399-ல் ஆன்ட்ராய்டு கைப்பேசியும், ரூ.9,990-ல் 32 அங்கு எல்சிடி டிவியும் அளிப்பதாக அறிவித்து மோசடி செய்தார். இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட மோஹித்துக்கு 2018-ல் ஜாமீன் கிடைத்தது.

இதுவரையில் பொதுமக்களை ஏமாற்றிய கும்பல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை குறி வைக்கத் தொடங்கி உள்ளது. இதற்காக, உணவுப் பொருட்கள் ஏற்றுமதி எனும் பெயரில் ஒன்றன் பின் ஒன்றாக நிறுவனங்களை தொடங்கி மோசடி செய்துள்ளனர். பாசுமதி அரிசி, உலர் பழங்கள், மசாலா வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை முன்பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு, பாக்கித் தொகையை தராமல் ஏமாற்றுவது மோஹித்தின் மோசடியாக இருந்துள்ளது.

இப்பொருட்களை சந்தையில் தாங்கள் வாங்கியதைவிடக் குறைந்த விலைக்கு விற்று அதையும் பணமாக்கி கொண்டுள்ளனர். ‘டிரை புரூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’, ‘துபாய் டிரைபுரூட்ஸ்’ உள்ளிட்ட 6 நிறுவனங்களை தொடங்கிய மோஹித் மீது 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் புகார்கள் பதிவாகி உள்ளன.

எனினும், தனது நண்பர்கள் மற்றும் பணியாளர்களின் பெயரில் நிறுவனங்களை தொடங்கி ஏமாற்றிய மோஹித் கோயல், அதன் பின்னணியில் மறைந்து இருந்தார். இந்நிறுவனங்கள் மீதான பல்வேறு புகார்கள் உ.பி.யின் நொய்டாவிலும் பதிவாகி இருந்தது. இவற்றை தனிப்படை அமைத்து விசாரிக்கத் தொடங்கினார் அதன் துணை ஆய்வாளரான சு.ராஜேஷ். கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழரான இவரிடம், மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மோஹித் கோயலும் அவரது முக்கிய சகாவான ஜாங்கிட்டும் கைதாகி உள்ளனர்.

ஐபிஎஸ் தமிழர் நடவடிக்கை

இதுகுறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் நொய்டா காவல்துறை துணை ஆணையரான சு.ராஜேஷ் ஐபிஎஸ் கூறும்போது,"முதலில் வாங்கும் உணவுப்பொருட்களுக்கு ஓரிரு லட்சங்களை முன்கூட்டியே அளித்து நம்பிக்கையை பெற்றுள்ளனர். பிறகு ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை பெற்றுக் கொண்டு பணத்தை செலுத்தாமல் ஏமாற்றிஉள்ளனர். இதுபோல ஏராளமானோரை ஏமாற்றிய பின், புதிய பெயரில் வேறு நிறுவனம் தொடங்கி மீண்டும் ஏமாற்றி வந்துள்ளனர்.

தற்போது ஆர்.கே.கேம்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கி அவர்களது கேம்ஸ் செயலிகள் ஆப்பிஸ் உள்ளிட்ட பலவகை கைப்பேசிகளில் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. ரூ.10 கோடி முதலிட்டிலான இதில் அவரது மோசடி செய்யும் விதம் என்ன எனவும் விசாரித்து வருகிறோம்" என்றார்.

இவ்வழக்கில், மேலும் 12 பேரைநொய்டா போலீஸார் தேடி வருகின்றனர். இக்கும்பல் தமிழகத்தின் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும், பலர் இன்னும் புகார் செய்யாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இக்கும்பலிடம் அருணாச்சலப் பிரதேச அரசின் ஒரு உணவுப்பொருள் நிறுவனமும் பொருட்களை அனுப்பி ஏமாற்றம் அடைந்துள்ளது.

இதுபோல, மோஹித்திடம் ஏமாந்த சுமார் 300 பேருடன் தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கே.கே.கிருஷ்ண ராஜ் ஒரு வாட்ஸ் அப் குழு நடத்தி வருகிறார். அதேசமயம், கைதாகி சிறையில் இருக்கும் மோஹித், ஜாங்கிட்டை ஜாமீனில் எடுக்க இருபதுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் நொய்டா நீதிமன்றம் வந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x