Published : 13 Oct 2015 07:39 AM
Last Updated : 13 Oct 2015 07:39 AM
சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளிக்கும் எழுத்தாளர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து அகாடமியின் நிர்வாகக் குழு வரும் 23-ம் தேதி கூடி முடிவு எடுக்க உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் சாகித்ய அகாடமியின் செயலாளர் டாக்டர்.கே.ஸ்ரீநிவாசராவ் கூறிய தாவது:
இந்த அகாடமி வரலாற்றில் விருதுகளை இதுவரை யாரும் திரும்ப ஒப்படைத்தது கிடையாது. சில காரணங்களுக்காக விருது களை பெற மறுத்த சம்பவங்கள் உண்டு. இதை திரும்ப பெறுவதா? வேண்டாமா? என்பதை எங்கள் நிர்வாகக் குழு தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு எடுக்க வரும் 23-ம் தேதி டெல்லியில் நிர்வாக குழு கூடுகிறது. தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விருதுகளை திரும்ப பெறும் விவகாரம் குறித்தும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எங்கள் அமைப்பு, தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இயங்கும் அமைப்பு என்பதால் இந்த விவகாரத்தை ஆலோசிக்கும் குழுவின் மீது எந்தவிதமான அரசு மற்றும் அரசியல் தலையீடுகள் இருக்காது’ எனத் தெரிவித்தார்.
நயன்தாரா சேகலில் துவங்கி நேற்றுமுன்தினம் வரை, சாகித்ய அகாடமி விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தவர்கள் ஒன்பது பேர்.
நேற்று காஷ்மீரின் குலாம்நபி காயல் மற்றும் கன்னட எழுத்தாளர் டி.என்.நாத் இருவரது அறிவிப்பை தொடர்ந்து 11 என உயர்ந்துள்ளது. இவர்களில் நான்கு பேர் மட்டுமே டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்துக்கு மெயில் மற்றும் தபால் மூலம் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறப் படுகிறது. அவர்கள் அதில் விருதை திரும்ப ஒப்படைப்பது எப்படி என்றும் கேட்டு எழுதியுள்ளனர். இது மட்டுமன்றி அகாடமியின் 4 உறுப்பினர்களும் தம் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதில் இருவர் அகாடமியின் முக்கிய அமைப்பான ஆலோ சனைக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் அனைவரது பதவிக் காலம் வரும் 2017வரை உள்ளது. அதில், ஆலோசனைக்குழுவின் உறுப்பி னராக இருக்கும் இருவர் பதவிகள் மட்டுமே மீண்டும் நிரப்பப்படும் எனக் கருதப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து தம் விருதுகளை திரும்ப ஒப்படைப்பவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது.
ஆனால், அதன் விளைவாக அகாடமியில் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை எனவும், இதை விடுத்து எழுத்தா ளர்கள் வேறு பல போராட்ட முறைகளை கையில் எடுக்கலாம் என்றும் சாகித்ய அகாடமியின் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் அகாடமி வட்டாரங்கள் கூறிய போது, ‘நாடு முழுவதிலும் உள்ள எழுத்தாளர்களின் தாயாக இருக்கும் ஒரே ஒரு தேசிய அமைப்பு இது. இதன் மூலம் அளிக்கப்பட்ட விருதை திருப்பி அனுப்புவதன் மூலம் எழுத்தாளர்கள் தம் தாயை அவமதிப்பாகக் கருதப்படும். மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள் என்பதால் அவர்கள் ஏதோ ஒரு வற்புறுத்தல் காரணமாக திரும்ப ஒப்படைக்கும் விவகாரத்தை தொடங்கி வைத்தி ருக்கலாம் என சந்தேகம் உள்ளது’ எனக் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT