Published : 12 Jan 2021 11:15 AM
Last Updated : 12 Jan 2021 11:15 AM
வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில், விவசாயிகள் சார்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும். அந்தப் பேரணியால் குடியரசு நாள் அணிவகுப்புக்குத் தொந்தரவு நேரும் எனக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை டெல்லி காவல்துறை மூலம் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 8 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் அதில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. வரும் 15-ம் தேதி 9-வது கட்டப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் நேற்று வேளாண் சட்டங்கள் செல்லுபடியானதா என்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தனர். வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய விதம் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசித்து, விவாதித்து நிறைவேற்றி இருக்க வேண்டும் என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த வேளாண் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அமல்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். ஒருவேளை மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்த முடியாது என்றால், அந்தச் சட்டங்களுக்குத் தடை விதிக்க நேரிடும் எனவும் உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.
இதற்கிடையே, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று, அணிவகுப்பு நடக்கும் ராஜபாதையில், டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சார்பில் ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது.
இது தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
''குடியரசுத் தினத்தன்று விவசாயிகளில் ஒரு தரப்பினர், அணிவகுப்பு நடக்கும் இடத்தில் டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக உளவுப் பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு டிராக்டர் பேரணி நடத்துவது குடியரசு தினக் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கும். தொந்தரவுக்கு ஆளாக்கும்.
அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தும். நாட்டுக்கே மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தும்.
போராட்டம் செய்வதற்கு உரிமை இருக்கிறது. அதேசமயம், பொது அமைதி, பொதுநலன் ஆகியவற்றையும் மனதில் வைத்து, உலக அளவில் தேசத்தை மதிப்புக் குறைவுக்கு ஆளாக்காமல் இருக்க வேண்டும்.
குடியரசு நாள் என்பது அரசியலமைப்புச் சட்டரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியமானது. 26-ம் தேதி மட்டும் நிகழ்ச்சி நடப்பதில்லை. அதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே ராஜபாதையில் அணிவகுப்பு ஒத்திகை நடக்கும்.
ஆதலால், டிராக்டர் பேரணி நடத்தத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும். டிராக்டர் பேரணி மட்டுமல்லாது, வாகன அணிவகுப்பு, பேரணி என எந்தவகையிலும் டெல்லி தலைநகர் பகுதியில் நடத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT