Published : 12 Jan 2021 08:44 AM
Last Updated : 12 Jan 2021 08:44 AM
வரும் பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை பட்ஜெட் தொடர்பாக எந்தவிதமான ஆவணங்களும் அச்சாகவில்லை.
நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து முதல்முறையாக இப்போதுதான் ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை ஆவணங்கள் ஏதும் அச்சடிக்கப்படவில்லை.
இதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் முறைப்படி மத்திய அரசு அனுமதி பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ெஜட் ஆவணங்கள் அச்சடிக்க வேண்டுமென்றால், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் 14 நாட்களுக்குமுன்பே அச்சகத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லாமல் வேலை பார்க்க வேண்டும். கரோனா பரவல் அச்சத்தில் ஊழியர்கள் மொத்தமாக கூடுவது கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், ஆவணங்கள் அச்சடிக்கப்படவில்லை.
பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தின் நார்த்பிளாக்கில் உள்ள நிதியமைச்சகத்துக்குச் சொந்தமான அச்சகத்தில் அச்சாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த முறை பட்ஜெட் அனைத்தும் ஸ்மார்ட் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. எம்.பி.க்கள் யாருக்கும் பட்ஜெட் நகல்கள் வழங்கப்படாது. அவர்களுக்கு அனைத்தும் ஃசாப்ட் காப்பியாக அனுப்பி வைக்கப்படும். அதுபோல் பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான ஆவணங்கள் ஏதும் அச்சடித்து வழங்கப்படாது. அவையும் ஃசாப்ட் காப்பியாக எம்.பி.க்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் பட்ஜெட் தயாரிப்பு பணிக்கு முன்பாக, வழக்கமாக ஹல்வா தயாரிப்பு பணி நடக்கும். இந்த ஹல்வா தயாரித்தபின், அதை பட்ஜெட்தயாரிக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நிதியமைச்சர் வழங்குவார். ஆனால், இந்த ஹல்வா தயாரிக்கும் வழக்கமும் இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக ஹல்வா தயாரிக்கும் பணி ஜனவரி 20ம் தேதி தொடங்கும். பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவிட்டால், பணி முடியும்வரை யாரும் வீட்டுக்குச் செல்லமாட்டார்கள், குடும்பத்தினருடன் பேசமாட்டார்கள். உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே பட்ஜெட் தயாரிப்பு பணிகளை மேற்பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படஉள்ளது. பட்ஜெட் இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலிலும், 2-வது கட்டமாக மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT