Published : 11 Jan 2021 09:04 PM
Last Updated : 11 Jan 2021 09:04 PM
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது, தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
வரும் 16-ம் தேதி தொடங்கும் தடுப்பூசி முகாமில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன்பின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குக் கீழான இணைநோய்கள் கொண்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. மொத்தம் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் 16-ம் தேதி உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் முகாம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி விநியோகம், பாதுகாப்பு உள்ளட்ட அம்சங்கள் குறித்து ஆலோசித்தார். ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கரோனா நெருக்கடியில் ஒற்றுமையாக நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். விரைவான முடிவுகள் முழு உணர்திறனுடன் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக, கரோனா உலக நாடுகளில் பரவியது போல் இந்தியாவில் பரவவில்லை.
ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட இரண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைத் தவிர நாட்டில் இன்னும் நான்கு தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன.
நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றவர்களை விட செலவு குறைந்தவை. இவை நமது தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசியின் போது இந்தியாவின் தடுப்பூசி போட்ட கடந்த கால அனுபவம் கை கொடுக்கும்.
இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே மத்திய அரசின் இலக்கு ஆகும். முதல் கட்டமாக சுமார் 3 கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
சுகாதார ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், பிற முன்னணி தொழிலாளர்கள், பாதுகாப்புப் படைகள், காவல்துறை மற்றும் பிற துணை ராணுவப் படையினருக்கும் முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும்.
3 கோடி கரோனா போர் வீரர்கள், முன்னணி தொழிலாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்கும்.
கரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்கப்பட வேண்டும். இதனை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்; இதில் சமூக, மத குழுக்கள் ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி ஒத்திகை முடிந்துள்ளது, இது மிகப்பெரிய சாதனையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT