Published : 11 Jan 2021 09:54 AM
Last Updated : 11 Jan 2021 09:54 AM
வேளாண் சட்டங்கள் தொடர்பாக நிலவிவரும் அரசியல் முட்டுக்கட்டைகளை உச்ச நீதிமன்றத்தின் தலையீடின்றி மத்திய அரசுதான் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால், டெல்லியின் அனைத்து எல்லைகளையும் விரைவில் மூடுவோம் என அனைத்து இந்திய கிசான் சங்கார்ஷ் ஒருங்கிணைப்பு குழு(ஏஐகேஎஸ்சி) மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கடும் குளிரிலும், மழையிலும் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு வலுத்து வருகிறது.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே 8 கட்டப் பேச்சுவார்த்தை நடந்தும் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை. 6-வது கட்டப் பேச்சுவார்த்தையின்போது விளைநிலங்களில் கழிவுகளை எரித்தல், வழக்குப் போடுவதிலிருந்து விலக்கு, மின்சாரக் கட்டண மானியம் குறித்து பரிசீலிக்க மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரும் 15-ம் தேதி 9-வது கட்டப்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து இந்திய கிசான் சங்கார்ஷ் ஒருங்கிணைப்பு குழு(ஏஐகேஎஸ்சி) நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ வேளாண் சட்டங்கள் தொடர்பாக நிலவும் அரசியல் முட்டுக்கட்டைகளை தீர்ப்பதில் உச்ச நீதிமன்றத்துக்கு எந்தவிதமான பங்கும் இ்ல்லை. இதை மத்திய அரசுதான் தீர்க்க வேண்டும்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், விரைவில் டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் போராட்டம் நடத்தப்படும்.
மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தத்தின் அடிப்படையில் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் எந்தப் பங்கும் இல்லை. இந்த விவகாரத்தை அரசியல் தலைவர்களிடம் விட்டுவிட வேண்டும்.
மத்தியில் ஆளும் பாஜக தலைைமயிலான அரசு இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் தன்னுடைய அரசியல் பொறுப்புணர்வை சுருக்கிக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை அரசியல் கேடயமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது.
டெல்லியின் எல்லைகளில் எங்களின் போராட்டம் தீவிரமடையும். விரைவில் அனைத்து எல்லைகளையும் மூடுவோம். பாஜக தலைமையிலான மத்திய அரசும், நாடாளுமன்றமும் தவறான சட்டங்களை நிறைவேற்றியுள்ள என என்பதைக் கூறுவோம்.
இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளை வேரோடு பிடுங்கி எறியும், வேளாண் செய்யும் விதத்தை மாற்றும், உணவுப் பாதுகாப்பைக் குறைத்துவிடும். வரும் காலங்களில் அதிகமான தற்கொலையும், பட்டினிச்சாவுகளும் ஏற்படும். நீர்நிலை, வனவளம், சூழியல் சமநிலையை அழித்துவிடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளை அகற்றக் கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில் இந்த அறிக்கையை விவசாயிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT