Published : 09 Jan 2021 09:58 PM
Last Updated : 09 Jan 2021 09:58 PM
வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அளவில் நமது பிம்பமாக விளங்குவதுடன் சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் விளங்குகிறார்கள். இந்தியா சம்பந்தப்பட்ட சர்வதேச விவகாரங்கள் ஆகட்டும், இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மூலதனமோ பண பரிவர்த்தனையோ ஆகட்டும், அவர்கள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டின் நிறைவு விழாவில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 1915-ம் ஆண்டு இதே தினத்தன்று இந்தியாவின் மிகப்பெரும் வெளிநாடு வாழ் இந்தியரான மகாத்மா காந்தி மீண்டும் இந்தியா திரும்பினார் என்று அவர் தெரிவித்தார்.
நமது சமூக சீர்திருத்தங்கள், சுதந்திர இயக்கத்திற்கு விரிவான அடித்தளத்தை அமைத்துத் தந்ததுடன், அடுத்த மூன்று தசாப்தங்களில் ஏராளமான அடிப்படைத் தன்மைகளில் இந்தியாவை அவர் மாற்றி அமைத்தார். அதற்கு முன்பாக இருபது வருடங்கள் அவர் வெளிநாட்டில் தங்கியிருந்தபோது வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியா பின்பற்றவேண்டிய கொள்கைகளைக் கண்டறிந்தார்.
தனிநபர் மற்றும் கூட்டு வாழ்க்கை முறை குறித்த மகாத்மா காந்தியின் குறிக்கோள்களை நினைவு கூரும் தருணமாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அமைவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்தியர் என்னும் உணர்வு, அகிம்சை, எளிமை மற்றும் நீடித்த மேலாண்மை போன்ற மகாத்மா காந்தியின் வழிகாட்டு நெறிமுறைகள் இன்றும் நம்மை வழிநடத்தி செல்வதாக அவர் மேலும் கூறினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான நமது பிணைப்பை புத்துயிர் பெறச் செய்த அடல் பிகாரி வாஜ்பாயின் தொலைநோக்கு பார்வைக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின கொண்டாட்டம் கடந்த 2003- ஆம் ஆண்டு அவர் இந்திய பிரதமராக இருந்தபோது தொடங்கியது.
கோவிட் பெருந்தொற்று குறித்து பேசிய ராம்நாத் கோவிந்த், கடந்த 2020-ஆம் ஆண்டில் பெருந்தொற்றினால் உலகளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டதாகத் தெரிவித்தார். சர்வதேச அளவில் பெருந்தொற்றினால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது.
பிற நாடுகள் “உலகின் மருந்தகமாக” இந்தியாவை நோக்கும் வகையில் நாம் சுமார் 150 நாடுகளுக்கு மருந்துகளை விநியோகித்துள்ளோம். நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவாதிகள் கொவிட் தொற்றுக்கு எதிராக அண்மையில் தயாரித்துள்ள இரண்டு தடுப்பு மருந்துகள், தற்சார்பு இந்தியா கனவை நனவாக்கும் முயற்சியின் மிகப்பெரும் சாதனையாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT