Published : 09 Jan 2021 05:56 PM
Last Updated : 09 Jan 2021 05:56 PM
போகியன்று கடும் புகை மூட்டத்தை உண்டாக்கி விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் அறுவடை திருவிழாவான பொங்கலுக்கு முன்தினம் கொண்டாடப்படும் போகியன்று, பழைய பொருட்களை எரிப்பது பொதுமக்களின் வழக்கமாகும்.
2018-ஆம் ஆண்டு போகி அன்று சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக, விமானங்கள் திருப்பிவிடப்பட்டு/ரத்து செய்யப்பட்டு தாமதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். கிட்டத்தட்ட 73 புறப்பாடுகளும், 45 வந்து சேர வேண்டிய விமானங்களும் பாதிக்கப்பட்டன.
ஆனால் 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டு போகியின் போது, சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக, புகை மூட்டத்தின் அளவு குறைந்து, வெகு சில விமான சேவைகளே பாதிக்கப்பட்டன.
இந்த வருடம் போகியன்று கடும் புகை மூட்டத்தை உண்டாக்கி விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேட்டுக் கொள்கிறோம்.
புகைமூட்டம் ஏற்படுவதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு விமானங்களை ரத்து செய்ய வேண்டிய திருப்பிவிட வேண்டிய நிலை ஏற்படுவதாலும், பயணிகள் சிரமத்திற்கு உட்படுவதாலும், எங்களது இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் உண்டாகும் விளைவுகள் குறித்து சென்னை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கிராமங்களில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட தகவல்களை இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் சென்னை விமான நிலையத்தின் பெருநிறுவன தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT