Last Updated : 09 Jan, 2021 11:56 AM

10  

Published : 09 Jan 2021 11:56 AM
Last Updated : 09 Jan 2021 11:56 AM

இன்று அமெரிக்க அதிபருக்கு நேர்ந்தது நாளை நமக்கும் நேரலாம்: ட்விட்டர் நிறுவனம் குறித்து எச்சரிக்கும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா

இன்று அமெரிக்க அதிபருக்கு நேர்ந்தது நாளை நமக்கும் நேரலாம் என ட்விட்டர் நிறுவனத்தின் மீது தனது அதிருப்தியைத் தெரிவித்து, எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா.

முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விடுபடவிருக்கும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதற்கு அவரின் ட்வீட்டே காரணம் என்று கூறப்பட்ட நிலையில் ட்விட்டர் நிர்வாகம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

ட்ரம்ப் ட்விட்டர் வாயிலாக மேலும் வன்முறையைத் தூண்டும் பதிவுகளை இடலாம் என்பதற்காக கணக்கை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இது பேச்சுரிமையைப் பறிக்கும் செயல், எதிர்க்கட்சி, இடதுசாரிகளின் தூண்டுதலால் நடக்கும் செயல் என ட்ரம்ப் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், "ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ள செய்கை, ஜனநாயக நாடுகளுக்கு இது போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படவுள்ள அச்சுறுத்தலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. அமெரிக்க அதிபருக்கு இது நடக்குமென்றால், நாளை இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால் மத்திய அரசு விரைவாக இத்தகைய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை சீராய்வு செய்வது நமது ஜனநாயகத்துக்கு நல்லது" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே, அதிபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படுவதாக இதுவே முதன்முறை. ட்விட்டர் மட்டுமல்லாமல், பேஸ்புக், ட்விட்ச், ஸ்நாப் சேட் போன்ற சமூக வலைதளங்களுமே ட்ரம்ப் கணக்கை முடக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x