Published : 30 Oct 2015 06:14 PM
Last Updated : 30 Oct 2015 06:14 PM
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து, அதன் கடந்த கால ஆட்சிகளை விமர்சித்து வெற்றி பெற்றது பாரதிய ஜனதா கட்சி. இப்போது, மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மாநிலக் கட்சிகளுடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தம் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்காக காங்கிரஸை எதிர்த்து கடும் பிரச்சாரம் செய்து வந்தது பாஜக. இதைத் தொடர்ந்து வந்த ஹரியாணா, மகராஷ்ட்ரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸையே எதிர்க்க வேண்டிய நிலை பாஜகவுக்கு இருந்தது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் இருந்து மாற்றம் ஏற்பட்டிருப்பது காணப்படுகிறது. இங்குள்ள மாநிலக் கட்சியான ஆம் ஆத்மியை கடுமையாக எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதை அடுத்து, இப்போது பிஹாரிலும் அங்குள்ள பிராந்தியக் கட்சிகளான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையே முக்கியமாக எதிர்க்க வேண்டியதாகி விட்டது.
அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் மாநிலக் கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை பாஜக எதிர்க்க வேண்டி இருக்கும். மேற்கு வங்கத்திலும் அங்கு மம்தா பாணர்ஜி தலைமையில் ஆளும் பிராந்தியக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ், பாஜகவின் முக்கிய எதிரியாக உள்ளது. இதேபோல், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் பாஜகவை பிராந்திய மற்றும் மாநிலக் கட்சிகளே மிரட்டி வருகின்றன.
இது குறித்து 'தி இந்து'விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், "இதற்கு, மாநிலங்களில் நிலவும் சாதி அரசியல் மற்றும் தனிப்பட்ட செல்வாக்குதான் முக்கியக் காரணம். இதுவரையிலான தேர்தல்களில் காங்கிரஸை எதிர்ப்பது எளிதாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையான பிரச்சினைகளால் புதுப் புது யுக்திகளை அதன் சட்டப்பேரவை தேர்தல்களில் கையாள வேண்டி இருக்கும். இந்த விஷயத்தில் எங்களுக்கு டெல்லியின் ஆம் ஆத்மி கட்சியிடம் ஏற்பட்ட தோல்வி ஒரு பெரிய பாடமாக உள்ளது" என்று கூறினர்.
மக்களவைத் தேர்தலின் வெற்றிக்கு பின் மாநில சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்த பாஜக, தன் கூட்டணி உறுப்பினர்கள் உதவி இன்றி தனித்து போட்டியிடவே விரும்பி வந்தது. இதற்காக, மகராஷ்ட்ராவில் தேஜமுவின் மூத்த உறுப்பினரான சிவசேனாவை கழட்டி விட்டது. ஜார்கண்டில் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவையும், ஜம்மு - காஷ்மீரிலும் தேஜமுயின் கூட்டணிக் கட்சிகள் இன்றி பாஜக தனித்தே போட்டியிட்டது. தற்போது மீண்டும் பிஹார் தேர்தல் முதல் அதன் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் அத்தனையிலும் காங்கிரஸ் கட்சி வலுவிழ்ந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT