Published : 08 Jan 2021 06:07 PM
Last Updated : 08 Jan 2021 06:07 PM
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 2020 செப்டம்பர் 30 அன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் விடுவிக்கப்பட்டனர்.
சிறப்பு நீதிமன்றம் தனது 2,300 பக்கங்களில் அளித்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டமைப்பைக் கொண்டுவருவதற்கான எந்தவொரு சதித்திட்டத்திலும் ஈடுபட்டதாக, குற்றம் சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.
இதுகுறித்து மேல்முறையீடு செய்துள்ள அயோத்தி குடியிருப்பாளர்களுக்கான வழக்கறிஞர் கூறியதாவது:
''பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பாக அயோத்தி குடியிருப்பாளர்கள் ஹாஜி மஹ்பூப் மற்றும் ஹாஜி சயாத் அக்லக் அகமது ஆகியோர் லக்னோ உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக சிபிஐ, உயர் நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும். ஆனால், சிபிஐ வழக்கை நகர்த்தாததால் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதென இருவரும் முடிவு செய்தனர்''.
இவ்வாறு அயோத்தி குடியிருப்பாளர்களுக்கான வழக்கறிஞர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT