Published : 08 Jan 2021 04:41 PM
Last Updated : 08 Jan 2021 04:41 PM
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தலாம் என்ற அறிவிக்கையை உறுதி செய்து கடந்த டிசம்பர் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை சேலத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜ்னா எனும் சாலை போக்குவரத்து திட்டத்தின் கீழ் 34 ஆயிரத்து 800 கி.மீ. தொலைவுக்கு ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பில் சாலை போக்குவரத்து திட்டத்தைத் தொடங்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சேலம் - சென்னை இடையிலான 277.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு எட்டு வழிச்சாலையை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தச் சாலை சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.
இந்தத் திட்டத்துக்காக 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டது. ஆனால், இந்தத் திட்டத்தால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் எடுக்கப்படும், காடுகள், மலைகள் அழிக்கப்படும் என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.
இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்தத் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், மத்திய தேசியநெடுஞ்சாலைத்துறை அமைச்சகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது
அதில், “நில உரிமையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், எதிர் மனுதாரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டத்துக்கு உட்பட்டு தேசிய நெடுஞ்சாலை 179ஏ, 179பி இடையிலான விரிவாக்கப் பணிகளுக்காக முறைப்படி நிலம் கையக அறிவிக்கையை வெளியிட்டு, மத்திய அரசோ, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமோ பணிகளைத் தொடரலாம்” எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “உச்ச நீதிமன்றத்தின் ஆவணத்தின்படி அளித்த தீர்ப்பில் தவறு இருக்கிறது. இந்தத் தவறு ஒட்டுமொத்த நீதி பரிபாலனத்தையும், தீர்ப்பையும் தவறாக்கிவிடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT