Published : 08 Jan 2021 01:47 PM
Last Updated : 08 Jan 2021 01:47 PM
பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 23்-ம் தேதியிலிருந்து 2021, ஜனவரி 6-ம் தேதி வரை பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கியது. லண்டனில் இருந்து 256 பயணிகள், விமானத்தில் இந்தியா வந்துள்ள நிலையில், அதில் எத்தனை பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் இருக்கிறது எனத் தெரியவில்லை.
இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 6-ம் தேதி வரை 73 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்து பகுதியில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து, அந்நாட்டில் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தையும் பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன.
இந்தியாவும் பிரிட்டனுக்கு 6-ம் தேதி வரை விமானப் போக்குவரத்தை நிறுத்தியது. நேற்று முதல் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கியது. இரு நாடுகளுக்கு இடையே வாரத்துக்கு 30 விமானங்கள் வீதம் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுடன் பயணித்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அனைவரும் விசாரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டன் தவிர்த்து உருமாறிய கரோனா வைரஸ் பரவல் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT