Published : 08 Jan 2021 01:11 PM
Last Updated : 08 Jan 2021 01:11 PM
கேரளாவில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மீது ஊழல் புகார்கள் இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும், தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகம் தொடர்பிருப்பதால் முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர்.
பதாகைகள், பேனர்களுடன் அவைக்குள் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளுநர் பேசத் தொடங்கியதும் கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.
ஆளுமர் முகமது ஆரிஃப் கான், கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அரசின் சாதனைகள், செயல்பாடுகள் ஆகியவற்றைப் பேசத் தொடங்கினார். ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து கோஷமிட்டு இடையூறு செய்தனர்.
அப்போது ஆளுநர் முகமது ஆரிப் கான் பேசுகையில், “நான் என்னுடைய அரசியலமைப்புக் கடமையைச் செய்கிறேன். ஆளுநர் தன்னுடைய அரசியலமைப்புக் கடமையைச் செய்யும்போது இடையூறு ஏதும் இருக்கக் கூடாது என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் ஏற்கெனவே போதுமான அளவு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துவிட்டீர்கள். இனிமேல் எனது பேச்சில் இடையூறு செய்யாதீர்கள். உங்களின் கோரிக்கைகள் என் காதில் விழாது” என காங்கிரஸ் எம்எல்ஏக்களைக் கேட்டுக்கொண்டார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா எழுந்து, ஆளுநர் உரையிடையே பேச முயன்றார். சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது, தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷமிட்டார்.
ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். கையில் பதாகைகளுடனும், போஸ்டர்களுடனும் கோஷங்களை எழுப்பியவாறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியே சென்றனர்.
ஆளுநர் முகமது ஆரிப் கான் தன்னுடைய பேச்சில், “கரோனா காலத்தில் பல்வேறு சவால்கள் வந்தபோதிலும்கூட இதை ஆளும் இடதுசாரி ஜனநாயக அரசு சிறப்பாகக் கையாண்டது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பினராயி விஜயன் அரசு செயல்படுத்தியது.
குறிப்பாக சமுதாய சமையல்கூடம் அமைத்து, உணவு தேவைப்படுவோருக்கு உணவு வழங்கப்பட்டது. கரோனா காலத்தில் இலவசமாக சமையல் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் கரோனா நிவாரண தொகுப்புத் திட்டத்துக்காக ரூ.20 ஆயிரம் கோடியை கேரள அரசு ஒதுக்கியது. கேரளாவில் பயிரிடப்படும் 16 வகையான காய்கறிகள் அடிப்படை விலைக்கே விற்கப்படும் என அறிவித்தது.
மாநிலத்தின் 9 சதவீத மக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதில் 6 லட்சம் பேர் கரோனா காலத்தில் மாநிலத்துக்குத் திரும்பிவிட்டனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து மாநிலத்துக்குக் கிடைக்கும் அந்நியச் செலவாணியில் பெரும் இடைவெளி ஏற்பட்டது. பொருளாதாரத்தையும் பாதித்தது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT