Published : 08 Jan 2021 07:16 AM
Last Updated : 08 Jan 2021 07:16 AM

காஷ்மீரில் முழங்கால் அளவு உறைபனியில் 4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

ஸ்ரீநகர்

காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் மீட்டு, முழங்கால் அளவு உறை பனியில் சுமார் 4 மணி நேரம் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன் காரணமாக வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதி
யில் சுமார் 3 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. அங்கு சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 6-ம் தேதி
குப்வாரா மாவட்டம், ஹேண்ட்வாரா பகுதி, பெடாவதார் கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணி ஷமிமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. பனி மூடிய சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கர்ப்பிணியின் உறவினர்கள் திகைத்து நின்றனர்.

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் சினார் படைப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு 100 ராணுவ வீரர்கள் விரைந்து சென்று, பிரசவ வலியால் துடித்த ஷமிமாவை கட்டிலில் படுக்க வைத்து முழங்கால் அளவு பனியில் சுமந்து சென்றனர்.
சுமார் 4 மணி நேரம் உறை பனியில் கால் புதைந்து நடந்த ராணுவ வீரர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியை சேர்த்தனர். அன்று மாலை ஷமிமாவுக்கு குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து கர்ப்பிணியின் தந்தை குலாம் மிர் கூறும்போது, ``பிரசவ வலியால் துடித்த எனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் தவித்தேன். செல்போன் மூலம் சினார் படைப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் விரைந்து வந்து எனது மகளை கட்டிலில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். குறித்த நேரத்துக்கு விரைந்து வந்து உதவி செய்ததால் எனது மகளையும் குழந்தையையும் காப்பாற்ற முடிந்தது. சினார் படைப்பிரிவு வீரர்களுக்கு மனதின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

பிரதமர் பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ``நமது ராணுவ வீரர்கள் வீரம், தீரம், தொழில் நேர்த்திக்கு பெயர் பெற்றவர்கள். அதேநேரம் அவர்களது மனிதாபிமானமும் மெச்சத்தக்கது. எப்போதெல்லாம் மக்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நமது வீரர்கள் ஓடோடி வந்து உதவி செய்கிறார்கள். நமது ராணுவ வீரர்களின் வீரம், தீரம், மனிதாபிமானத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஷமிமா மற்றும் அவரது குழந்தையின் உடல்நலனுக்காக கடவுளை பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

உறைபனியில் கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் சுமந்து சென்ற வீடியோவை சினார் படைப்பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x