Published : 07 Jan 2021 04:57 PM
Last Updated : 07 Jan 2021 04:57 PM
டெல்லி தப்லீக் ஜமாத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா பரவல் பிரச்சினை உருவானது போன்று, விவசாயிகள் போராட்டத்திலும் கரோனா பரவல் ஏற்படுமா, விவசாயிகள் முறையாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறார்களா என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஜம்மு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரியா பண்டிட் என்பவர் வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் பாரிகர் மூலம் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், கடந்த ஆண்டு டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லக் கூடியபோது ஏற்பட்ட கூட்டம் குறித்தும், டெல்லி தப்லீக் ஜமாத்தில் மதவழிபாட்டுக் கூட்டம் நடந்தபோது சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருப்பது குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “விவசாயிகள் தற்போது சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் போராட்டம் நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி தப்லீக் ஜமாத்தில் இதேபோன்று சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் பலர் இருந்ததால், ஏற்பட்ட கரோனா பாதிப்பு போன்று விவசாயிகள் போராட்டத்திலும் எழுமா, விவசாயிகள் முறையாக கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா, அங்கு என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு சொல்ல வேண்டும்” எனக் கேட்டார்.
இதற்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “விவசாயிகள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி போராட்டத்தில் ஈடுபடவில்லை” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைைம நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “அடுத்த இரு வாரங்களுக்குள், டெல்லி போராட்டம் தொடர்பாக கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் என்னவெல்லாம் செய்யப்பட்டுள்ளன, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்த அறிக்கையை மத்திய அரசும், டெல்லி அரசும் தாக்கல் செய்ய வேண்டும். கரோனா பாதுகாப்பு வழிமுறைகள், தடுப்பு வழிமுறைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் சுப்ரியா பாண்டிட், “டெல்லி தப்லீக் ஜமாத்தில் ஏராளமானோர் கூடுவதைத் தடுப்பதில் டெல்லி போலீஸார் தவறிவிட்டனர். தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. அதுகுறித்து மத்திய அரசு ஏதும் கூறவில்லை” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “நீங்கள் தனிநபர் ஒருவர் மீதுதான் ஆர்வமாக இருக்கிறீர்கள். நாங்கள் கரோனா பரவல் குறித்துப் பேசுகிறோம். ஏன் சர்ச்சைகள் உருவாக வேண்டும் என விரும்புகிறீர்கள். அங்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இந்த விவகாரத்திலும் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT