Published : 07 Jan 2021 04:20 PM
Last Updated : 07 Jan 2021 04:20 PM
ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுவதாலேயே அவரது குடும்பத்தைப் பற்றி இழிவுபடுத்தும் பிரச்சாரங்களை டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
அடுத்த மாத அவுரங்காபாத் மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் தோழமைக் கட்சிகளான சேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே அந்த நகரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், மத்திய அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு மோடி அரசாங்கத்திற்கு வலிமையான மாற்றாக எதிர்த்து நிற்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும் சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது.
அடிக்கடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை புகழும் சிவசேனாவின் பத்திரிக்கையான 'சாம்னா' பத்திரிகை ராகுல் காந்தியை ஒரு போர் வீரன் என இம்முறை பாராட்டியுள்ளது.
இதுகுறித்து இன்று வெளியான சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் கூறபட்டுள்ளதாவது:
"டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் ராகுல் காந்திக்கு அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை. அவ்வாறு இல்லாதிருந்தால், ராகுல் காந்தி குடும்பத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரங்களை பாஜகவினர் மேற்கொள்ள மாட்டார்கள்.
ஒருவன் சர்வாதிகாரியாக இருந்தாலும் தனக்கு எதிராக ஒரே ஒரு மனிதன் இருந்தாலும் அவனைக் கண்டு அஞ்சுகிறான். இந்த தனி வீரன் நேர்மையானவனாக இருந்தால், அந்த பயம் மேலும் நூறு மடங்கு அதிகரிக்கிறது. டெல்லி ஆட்சியாளர்களின் ராகுல் காந்தி குறித்த அச்சம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவது ஒரு நல்ல விஷயம். நரேந்திர மோடியைத் தவிர பாஜகவுக்கு வேறு மாற்று இல்லை என்பதையும், ராகுல் காந்தியைத் தவிர காங்கிரஸு க்கு வேறு மாற்று இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி ஒரு பலவீனமான தலைவர் என்று பிரச்சாரம் செய்த போதிலும், அவர் இன்னும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை ஒரு போர்வீரனைப்போல அஞ்சாமல் எதிர்த்து நின்று தாக்குகிறார். இந்த எதிர்க்கட்சி, ஒரு கட்டத்தில், பீனிக்ஸ் போன்ற சாம்பலிலிருந்து கிளம்பிவரும்.
இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT