Published : 07 Jan 2021 09:08 AM
Last Updated : 07 Jan 2021 09:08 AM

கோவிட்-19 தடுப்பூசி; நாடுமுழுவதும் நாளை மீண்டும் ஒத்திகை

புதுடெல்லி

கோவிட்-19 தடுப்பூசி பயன்பாடு முறைகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 8ம் தேதி மற்றொரு ஒத்திகை நடைபெறுகிறது.

* நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

* இரண்டு கோவிட் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து சில மாநிலங்களில் கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கெனவே ஒத்திகை பார்க்கப்பட்டது.

* இந்நிலையில் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் (ஜனவரி 5 மற்றும் 7ம் தேதிகளில் ஒத்திகை மேற்கொள்ளும் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா தவிர) ஜனவரி 8ம் தேதி மற்றொரு ஒத்திகை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி விநியோகிக்கும் திறன் மற்றும் மேலாண்மையை உறுதி செய்வதற்காக இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.

* ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை போல், பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஊரக அல்லது நகர்ப்புற இடங்கள் என மூன்றுவிதமான இடங்கள் அடையாளம் காணப்படும்.

* இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஜனவரி 7-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தி ஒத்திகை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குகிறார்.

* பயனாளிகளின் பதிவு, திட்டமிடப்பட்ட இடங்களில் தடுப்பூசி போடுவது உட்பட ஒட்டுமொத்த தடுப்பூசி திட்டம், மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் பரிசோதிக்கப்படும். மாநிலம், மாவட்டம், வட்டாரம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் என கொவிட்-19 தடுப்பூசி அறிமுகத்தின் அனைத்து அம்சங்களையும், இந்த ஒத்திகை அறிய வைக்கும்.

* இந்த தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள ‘கோ-வின்’ என்ற மென்பொருளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதில் கோவிட் தடுப்பூசிகள் இருப்பு நிலவரம், அவற்றின் வெப்பநிலை மற்றும் தடுப்பூசி பயனாளிகளை கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி திட்ட மேலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், இந்த மென்பொருள் வழங்கும். இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேக கால் சென்டரும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* கோவிட்-19 தடுப்பூசி பணியை தொடங்குவதற்கு குளிர்சாதன கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசிகளை பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் குளிர்சாதன பெட்டிகள், இதர தளவாடங்கள் உட்பட அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

* தடுப்பூசி போடும் சுமார் 1.7 லட்சம் பேர், மற்றும் இந்த குழுவில் உள்ள 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x