Published : 07 Jan 2021 08:20 AM
Last Updated : 07 Jan 2021 08:20 AM
பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம், ஹரியாணாவின் பன்ச் குலா மாவட்டங்களுக்கு, பல்நோக்கு ஒழுங்குமுறை குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இறந்த வாத்துக்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், எச்5என்8 என்ற ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (பறவைக் காய்ச்சல்) வைரஸ் இருந்தது கண்டறிப்பட்டது. இதேபோல், ஹரியானாவில் இருந்து வந்த பறவைகளின் மாதிரிகளிலும், இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தேசிய வைராலஜி மையம், சண்டிகர் பிஜிமர், டெல்லியில் உள்ள டாக்டர் ஆர்எம்எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி நிபுணர்கள் அடங்கிய இரண்டு பல்நோக்கு ஒழுங்குமுறை குழுக்களை, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஜனவரி 4-ம் தேதி அனுப்பியது.
மேலும் பறவைக் காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகளை மேற்பார்வையிட நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் இயக்குநர், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் மற்றும் கோவிட் சிறப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவும் கேரளாவுக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் மாநில சுகாதாரத் துறைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவர். மேலும், இந்தக் குழு கேரளாவில் கொவிட் நிலவரம் குறித்து ஆய்வு செய்யும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காகங்களுக்கும், வெளிநாட்டுப் பறவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை மத்திய கால்நடை பராமரிப்புத்துறை வழங்கியுள்ளது.
இது வரை, மனிதர்கள் யாருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. நிலைமையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT