Published : 06 Jan 2021 04:19 PM
Last Updated : 06 Jan 2021 04:19 PM
உத்தரப்பிரதேசம் புலந்த்ஷெஹரில் ‘தாக்கூர்’ எனும் பிராண்ட் காலணிகளை சாலையோரக் கடையில் விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார். இவர் மீது இந்துத்துவா அமைப்பினர் புகாரின் பேரில் வழக்கு பதிவாகி உள்ளது.
உ.பி.யின் மேற்குப்பகுதியிலுள்ள புலந்த்ஷெஹரின் நெடுஞ்சாலை ஓரத்தில் காலணி விற்று பிழைப்பவர் நாசிர் (26). நேற்று வழக்கம் போல் காலணிகளை விற்றுக் கொண்டிருந்தவரிடம் வந்தார் விஷால் சவுகான்.
இவர், இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தளத்தின் புலந்ஷெஹர் மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். நாசிர் தன் கடையில் விற்ற பல்வேறு நிறுவனப் பிரண்டுகளின் ஒரு காலணிகளின் பாதப்பகுதியில் ‘தாக்கூர்’ என எழுதப்பட்டிருந்தது.
இதன் பெயரிலான உயர்சமூகம் உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகம் பேர் உள்ளனர்.
இதனால், அக்காலணிகளை கண்டு அதிர்ச்சியுற்ற விஷால் சவுகான், புலந்த்ஷெஹர் நகரக் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து நாசிர் கைது செய்யப்பட்டு ஐபிசி 153-ஏ, 323 மற்றும் 504 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி விசாரணைக்கு உள்ளாகி இருக்கிறார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பஜ்ரங்தளம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளரான விஷால் சவுகான் கூறும்போது, ’ஒரு இந்து சமூகத்தின் பெயரை காலணியை பாதத்தில் மிதிபடும் வகையில் எழுதி விற்பனை செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதை நேரில் சென்று உறுதிப்படுத்திய பின் காவல்நிலையத்தில் புகார் செய்தோம். இக்காலணிகளைதயாரிக்கும் தொழிற்சாலை மீதும் புகார் அளித்துள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.
நாசிர் மீது மற்ற சமூகங்களை இழிவுபடுத்தியதாக வழக்கு பதிவாகி உள்ளது. நாசிர் விற்ற காலணிகள் உபியின் காஜியாபாத்தின் ஒரு தொழிற்சாலையில் பல வருடங்களாகத் தயாரித்து சந்தைகளில் விநியோகிக்கப்படுகிறது.
இதை நேரில் சென்று விசாரணை செய்ய வேண்டி புலந்த்ஷெஹர் காவல்நிலையப் படை காஜியாபாத் விரைந்துள்ளது. இந்த காலணிகள் பல வருடங்களாக உ.பி. மற்றும் பல்வேறு மாநிலங்களில் சாலையோரக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை பலரை போல் விற்கும் நாசிர் மட்டும் எழுந்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த புலந்த்ஷெஹர் காவல் நிலையத்தாரால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏனெனில், அதே பகுதியில் இந்த தாக்கூர் பிராண்ட் காலணிகளை பல இந்து வியாபாரிகளும் விற்பனை செய்கின்றனர்.
உ.பி.யின் ஆக்ராவில் ‘தாக்கூர்’ எனும் பெயரிலான நிறுவனம் சுமார் 70 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. மூன்றாவது தலைமுறையாக நடத்தி வருவதில் இரண்டு சகோதரர்கள் இடையே பங்கு பிரிக்கப்பட்டது.
எனவே, ஒரு நிறுவனத்திற்கு ’தாக்கூர் புட்வேர் கம்பெனி’ எனவும், மற்றொன்றுக்கு ’தாக்கூர் ஷூஸ் அண்ட் சப்பல்ஸ்’ என்றும் பெயரிடப்பட்டு செயல்படுகின்றன. இதன் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தை பெயரை கெடுக்கும் முயற்சி எனப் புகார் கூறியுள்ளனர்.
இதில் அவர்கள் தம் நிறுவனத்தின் காலணிகளை தாக்கூர் எனும் பெயரில் அரசிடம் அனுமதி பெற்று பதிவு செய்துள்ளோம். இக்காலணிகளை தாக்கூர் சமூகத்தினர் மிகவும் விரும்புவதாகவும், அவர்களுக்காகவே சிறப்பான முறையில் இவற்றை தயாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த கைதினால், சாலையோரம் காலணிகளை விற்று பிழைக்கும் குலாவட்டியின் ராம்நகர் பகுதிவாசியான நாசிர் வீட்டில் சோகம் நிலவி உள்ளது. இவர் அன்றாடம் விற்று கிடைக்கும் பணத்தில் தான் மறுநாள் குடும்பத்தினரின் உணவு எனக் கூறி கண்ணீர் விடுகிறார் நாசிரின் மனைவி தவ்பீக்கா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT