Last Updated : 06 Jan, 2021 12:48 PM

 

Published : 06 Jan 2021 12:48 PM
Last Updated : 06 Jan 2021 12:48 PM

இமாச்சலில் பறவைக் காய்ச்சல்; 2403 வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழப்பு: மாநிலத்தில் கடும் எச்சரிக்கை

உயிரிழந்த பறவைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.

சிம்லா (இமாச்சலப் பிரதேசம்) 

இமாச்சல பிரதேசத்தில் இதுவரை 2,400 க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், பறவை காய்ச்சல் குறித்து மாநிலத்தில் கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. பறவைக்காய்ச்சல் பரவியுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக டெல்லியில் மத்திய கால்நடை வளர்ப்புத்துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான காக்கைகள் இறந்ததை அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணிகளை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று ஆய்வு செய்தார். இதேபோல ராஜஸ்தானிலும் ஏராளமான காக்கைகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் சில பகுதிகளில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் பறவை காய்ச்சலை மாநிலப் பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. இங்கு உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 2,400 மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பெரும்பாலானவை வெளிநாட்டுப் பறவைகள்.

காங்க்ரா மாவட்ட ஆட்சியர் பறவைகள் விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் ''எந்தவொரு கோழி, பறவைகள், மீன்கள், அவற்றுடன் தொடர்புடைய தயாரிப்புகளையும் (முட்டை, இறைச்சி, கோழி போன்றவை) காங்க்ராவின் ஃபதேபூர், டெஹ்ரா, ஜவாலி மற்றும் இந்தோரா பகுதிகளில் விற்பனை / வாங்க / ஏற்றுமதி செய்வதை முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் ஜலந்தருக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார்.

டிசம்பர் இறுதியில் முதன்முதலாக பறவைகள் இறப்பதை வன அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்து கடிதம் எழுதினர். நக்ரோட்டா-சூரியன் வனத்துறை அதிகாரி டிசம்பர் 31 அன்று எழுதிய கடிதத்தில் நக்ரோட்டா-சூரியன் வனவிலங்கு வரம்பில் உள்ள பாங் அணை ஏரி சரணாலயத்தில் மொத்தம் 141 குளிர்கால புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்ததாக தெரிவித்தார்.

அந்த கடிதத்தில் ஜவாலி பீட் பகுதியில், 29 புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்ததாகவும், பட்டோலி பகோரியன் பகுதியில், 7 பார் ஹெட் கூஸ் இன பறவைகள் இறந்து கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநில வனத்துறை அமைச்சர் ராகேஷ் பதானியா ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

இமாச்சல பிரதேசத்தில் குளிர்காலத்தில் புலம்பெயர்ந்து வந்துள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அணை சரணாலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் ரிவர் டெர்ன், பழுப்பு-தலை குல், மற்றும் கர்மரண்ட்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கில் இடம்பெயர்ந்த குளிர்கால பறவைகள் இறந்து கிடந்தன.

அதிகாரிகள் நிலைமையை தீவிரவமாகக் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை 2,403 பறவைகள் இறந்துவிட்டன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அபாயம் உள்ளது அதனால். நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம், நிலைமையை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம் . பறவை காய்ச்சல் குறித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x