Published : 06 Jan 2021 11:07 AM
Last Updated : 06 Jan 2021 11:07 AM
மேற்கு வங்கத்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளது துரதிஷ்டவசமானது எனினும் அவரது ராஜினாமா கட்சியை பாதிக்காது என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.
மேற்கு வங்க மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான லஷ்மி ரத்தன் சுக்லா நேற்று திடீரென ராஜினாமா செய்தார். சுக்லா பதவி விலகியதற்கான காரணம் தெரியவில்லை. அவர் திரிணமூல் கட்சியில் தொடர்ந்து நீடிப்பார் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதைப்பற்றி கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி யார் வேண்டுமானாலும் பதவியை ராஜினாமா செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அங்கு அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரத்யேகமான வியூகத்தை உருவாக்கி தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சியைப் பலப்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு வழிகளில் மம்தா தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸை பலவீனப்படுத்தி வருகிறது. அதன் விளைவாக திரிணமூலிலிருந்து எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியதாவது: "ராஜினாமா செய்துள்ள சுக்லாவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உரிய மரியாதை கொடுத்து அவரை ஒரு அமைச்சராக்கினார். பல்வேறு தரப்பு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவர் தனது பதவியை விட்டு விலகியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் சுக்லாவின் ராஜினாமா கட்சியை எந்தவிதத்திலும் பாதிக்காது.''
திரிணமூல் காங்கிரஸின் மூத்த எம்.பி. சவுகதா ராய் கூறுகையில், சுக்லா, ''ஒரு நல்ல கட்சி உறுப்பினர் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக வரவேற்பு
இதனிடையே சுக்லா வரவேற்கப்படுவதாக பாஜக தெரிவித்துள்ளது. கட்சியில் சேரவும் அழைப்பு விடுத்துள்ளது.
சுக்லா ராஜினா குறித்து வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''சுக்லா பாஜகவில் கட்சியில் சேர விரும்பினால், அவரை நாங்கள் வரவேற்கிறோம். திரிணாமுல் காங்கிரஸுக்கு அரசியல் சித்தாந்தம் இல்லை, திசையும் இல்லை. இது சிபிஐ எதிர்ப்பு (எம்) என்ற புள்ளியிலிருந்து உருவான கட்சி திரிணமூல். அது இப்போது பொருந்தாது. டி.எம்.சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை அடிமட்ட மட்டத்தில் உள்ளவர்களும் அறிவார்கள். அக்கட்சியின் ஆயுள் இன்னும் கொஞ்ச காலம்தான்.''
பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ ''சுக்லாவை டி.எம்.சியை விட்டு வெளியேறி பாஜகவில் சேர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT