Published : 05 Jan 2021 04:27 PM
Last Updated : 05 Jan 2021 04:27 PM
உத்தரப் பிரதேசம் ஆக்ராவின் தாஜ்மகாலில் மீண்டும் காவிக் கொடியை நாட்ட நேற்று முயற்சிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் ஒரு பெண் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் நால்வரை ஆக்ரா போலீஸார் இன்று கைது செய்தனர்.
உலக அதிசயமான தாஜ்மகால் ஆண்டு முகலாய மன்னர் ஷாஜஹானால் 1653ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவிலான தாஜ்மகால், இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இந்துத்துவாவினரால் குறி வைக்கப்பட்டு வருகிறது.
இங்கிருந்த சிவன் கோயில் இடிக்கப்பட்டு தாஜ்மகால் கட்டப்பட்டதாக ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சிலர் சமூக ஊடகங்களில் பரவ விட்டதும் உண்டு. இதனுள் ஒரு கோயில் இருப்பதாகவும் அதை பூஜை செய்ய அனுமதிக்கும்படியும் இந்துத்துவா அமைப்பினரில் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை தாஜ்மகாலில் சுற்றுலாவாசிகளை போல் சுமார் பத்துப் பேர் நுழைந்தனர். தாஜ்மகாலுக்கு முன்பாக பார்வையாளர்கள் படம் எடுப்பதற்காக உள்ள நீண்ட பளிங்குக்கல் இருக்கையில் அமர்ந்தவர்கள், தாம் கொண்டுவந்த காவிக் கொடிகளை வெளியே எடுத்து அசைத்துக் காட்டினர்.
இதில் சிலர் ‘ஹர் ஹர் மஹாதேவ்!’ எனவும், ’ஜெய் ஸ்ரீராம்!’ என்றும் கோஷமிட்டனர். பிறகு அக்காவிக் கொடிகளை தாஜ்மகாலினுள் நாட்டவும் முயற்சித்துள்ளனர்.
இந்தக் காட்சிகளை இரண்டு வீடியோக்களாகவும் படம் எடுத்தவர்கள் உள்ளே இருந்தபடியே அதைச் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதையடுத்து, தாஜ்மகால் அமைந்துள்ள பகுதியான ஆக்ராவின் தாஜ்கன்ச் காவல் நிலையத்தார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.
இதில் காவிக் கொடிகளை வீசிக் காட்டியவர்களுக்குத் தலைமை வகித்தவர் ஆக்ரா மாவட்ட இந்து ஜாக்ரன் மன்ச் தலைவரான கவுரவ் தாக்கூர் என வீடியோவில் தெரிந்தது. இவருடன் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது அமைப்பைச் சேர்ந்த சோனு பகேல், சுசில் குமார் மற்றும் ரிஷி லாவண்யா எனும் இளம்பெண் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் மற்றவர்களும் தேடப்பட்டு வருகின்றனர். அனைவர் மீதும் இந்து-முஸ்லிம் தரப்பினருக்கு இடையே கலவரத்தைத் தூண்ட முயன்றதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுபோல், தாஜ்மகாலில் காவிக் கொடி நாட்ட முயல்வது முதன்முறையல்ல.
இதற்கு முன்பும் இந்துத்துவாவினர் இதுபோல் பாதுகாப்பை மீறி உள்ளே புகுந்து காவி கொடிகளை அசைத்துக் காட்டிச் சென்றனர். அதன் மீதும் பல வழக்குகள் பதிவான பின்பு மீண்டும் நடந்திருப்பது பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
தாஜ்மகாலின் பாதுகாப்பிற்கு என மத்திய பாதுகாப்புப் படைகளில் ஒன்றான சிஐஎஸ்எப் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் தாஜ்மகாலில் நுழையும் சுற்றுலாவாசிகள் மற்றும் பார்வையாளர்களைக் கடுமையான சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுப்புகின்றனர்.
இந்நிலையில், நேற்று சிஐஎஸ்எப் படையினரை மீறு இந்துத்துவா அமைப்பினர் நுழைந்தது எப்படி எனக் கேள்வி எழுந்துள்ளது. கைதான கவுரவ் தாக்கூர் கடந்த தசரா சமயத்திலும் தாஜ்மகாலில் நுழைந்து காவிக் கொடியை அசைத்துக் காட்டிச் சென்றுள்ளார்.
இதுபோல், நான்கு முறை இதுவரை தாஜ்மகாலில் தாம் காவிக் கொடியை வீசிக் காட்டியிருப்பதாகவும் கவுரவ் பெருமைப்படுகிறார். இதன் மீதான வழக்குகளும் தாஜ்கன்ச் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT