Last Updated : 04 Jan, 2021 03:18 PM

8  

Published : 04 Jan 2021 03:18 PM
Last Updated : 04 Jan 2021 03:18 PM

முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி எடுத்துக்கொண்டு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

பிஹார் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜித் சர்மா

பாட்னா

முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி எடுத்துக்கொண்டு நாட்டுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பு தடுப்பு மருந்துகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.

இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்துள்ள அதேவேளையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுப்பூசி நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பி உள்ளன. இதில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக பாஜக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஹார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அஜித் சர்மா திங்களன்று கூறியதாவது:

"புதிய ஆண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இது குறித்து மக்களிடையே சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை நீக்குவதற்காக, ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப்போல பிரதமர் நரேந்திர மோடியும் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

தடுப்பூசியை தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்கள் குறித்த பெருமையை பாஜக தட்டிச்செல்ல நினைக்கிறது. உண்மையில் இவை இரண்டும் காங்கிரஸ் காலத்தில் நிறுவப்பட்டவை ஆகும். எனவே மக்கள் தங்கள் நன்றிகளை காங்கிரஸுக்கும் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அஜித் சர்மா தெரிவித்தார்.

முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ''கோவிட் -19 தடுப்பூசி கோவாக்சின் மருந்துக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் 3 ஆம் கட்ட பரிசோதனையில் இருப்பதால் முன்கூட்டியே வழங்கியுள்ளது ஆபத்தானது. தடுப்பூசியின் முழு பரிசோதனைகளும் முடியும் வரை காத்திருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனை கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x