Published : 04 Jan 2021 01:32 PM
Last Updated : 04 Jan 2021 01:32 PM
உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்க உள்ளது எனப் பிரதமர் மோடி பெருமதித்தோடு தெரிவித்தார்.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில்-என்பிஎல் சார்பில் தேசிய அளவீட்டுவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
''உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காகப் பங்களிப்பு செய்த, இந்தியாவிலேயே மருந்துகளை உருவாக்கிய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகத் தேவையை நிறைவு செய்வதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உலக அளவில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும். எண்ணிக்கை எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோன்று பொருட்களின் தரமும் முக்கியம். தற்சார்பு இந்தியாவை உயர்த்தும் அளவுக்கு நம்முடைய பொருட்களின் தரம் இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கும், தொழில்துறைக்கும் இடையே கூட்டு இருப்பது இந்தியாவை வலிமைப்படுத்தும். உலக அளவில் புத்தாக்கம் அதிகமாகச் செய்யும் 50 நாடுகளில் இந்தியாவும் இருப்பது பெருமையளிக்கிறது
சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் இருக்கும் விஞ்ஞானிகள், நாட்டில் உள்ள ஏராளமான பள்ளிகளுக்குச் சென்று, தொடர்புகொண்டு பேசி, கரோனா காலத்தில் தங்களின் அனுபவங்களைப் பகிர வேண்டும். இது எதிர்காலத்தில் புதிய விஞ்ஞானிகள் உருவாவதற்குப் பயிற்சியாக அமையும்.
இந்தியா 2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. 2047-ம் ஆண்டில் 100-வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்தக் காலகட்டத்தில் நாம் தற்சார்பு இந்தியாவுக்கான ஒரு தரத்தை, முத்திரையை உண்டாக்க வேண்டும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT