Published : 04 Jan 2021 01:12 PM
Last Updated : 04 Jan 2021 01:12 PM
மேற்கு வங்கத்தில் பாஜக தலைவரின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணெந்து முகர்ஜி உயிர் தப்பினார். இதற்கு திரிணமூல் காங்கிரஸ்தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் பாசிம் பர்தாமன் மாவட்டத்தைச் சேர்ந்த அசன்சோலில் நடந்துள்ள இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமானவர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள்தான் என்று கிருஷ்ணெந்து முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு திரிணமூல் காரணமில்லை; அவருக்கிருந்த பழைய போட்டிகளின் காரணமாக நடந்திருக்கலாம் என்று ஆளும் திரிணமூல் கட்சி இதற்கு மறுப்பு தெரிவத்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஹிராப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள மேற்கு வங்க பாஜகவின் மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணெந்து முகர்ஜி கூறியதாவது:
"நான் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தாவிலிருந்து அசன்சோலின் ஹிராபூரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், டி.எம்.சி குண்டர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன். எனது காரை என் வீட்டின் அருகே நிறுத்தினர். பின்னர் கதவுகளைத் திறக்க முயன்று அதில் தோல்வியடைந்தனர்.
அதன்பின் அவர்கள் கண்மூடித்தனமாக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஓட்டுநர் உதவிக்காக கூச்சலிட்டார். அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்க்க நான் பலமுறை ஹாரன் ஓசை எழுப்பினேன். அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பது திரிணமூல் காங்கிரஸ்தான். இந்தச் சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளேன்.''
இவ்வாறு கிருஷ்ணெந்து முகர்ஜி கூறினார்.
முகர்ஜியிடமிருந்து புகார் வந்துள்ளதை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசி டிவி காட்சிகள் ஆராயப்படுகின்றன என்று ஹிராபூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் மறுப்பு
இக்குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது. இதுகுறித்து அசன்சோல் தக்ஷின் எம்.எல்.ஏ தபஸ் பானர்ஜி கூறுகையில், ''துப்பாக்கிச் சூட்டுக்கு திரிணமூல் காரணம் என்ற கிருஷ்ணெந்து முகர்ஜியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இதனை முற்றிலும் நிராகரிக்கிறோம். முகர்ஜி ஏற்கெனவே பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர். அவர் ஆட்களை மிரட்டிப் பணம் பறித்தல், கடத்தல் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் அவர் நீண்டகாலமாகத் தலைமறைவாக இருக்கிறார். அவரது பழைய போட்டிகளின் பழிவாங்கலில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT