Last Updated : 03 Jan, 2021 11:17 AM

3  

Published : 03 Jan 2021 11:17 AM
Last Updated : 03 Jan 2021 11:17 AM

சரத்பவாரை தலைவராக்கி யுபிஏவை வலிமையான எதிர்கட்சிகள் கூட்டணியாக்க வேண்டும்: காங்கிரஸுக்கு திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் நெருக்கடி

புதுடெல்லி

சரத்பவாரை தலைவராக்கி ஐக்கிய முற்போக்கு கூட்டணியை(யுபிஏ) வலிமையான எதிர்கட்சிகள் கூட்டணியாக்கக் காங்கிரஸுக்கு மீண்டும் நெருக்கடி கிளம்பியுள்ளது. இதற்காக, திமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சி எடுக்கத் தொடங்கி இருப்பதாகத் தெரிந்துள்ளது.

பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டு வருவது யுபிஏ. 2014 ஆம் ஆண்டிற்கு முன்பாக தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் இக்கூட்டணி ஆட்சி செய்தது.

ஆனால், பிரதமராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்ட பின் யுபிஏவின் தலைமை கட்சியான காங்கிரஸால் மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்து கூடப் பெற முடியவில்லை. அதேசமயம், அக்கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்த ராகுலின் தலைவர் பதவியையும் இதுவரை நிரப்ப முடியவில்லை.

இதுபோன்ற காரணங்களால் தொடர்ந்து மத்தியில் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக மேலும் வலிமை பெறத்துவங்கியுள்ளது. இதை சுட்டிக்காட்டும் வகையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும், வலிமையான எதிர்கட்சி இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இச்சுழலில், பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் பணியில் தற்போது பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படத் துவங்கி உள்ளன. இதன் காரணமாகக் காங்கிரஸுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் வட்டாரம் கூறும்போது, ‘‘யுபிஏவின் தலைவராக சரத்பவாரை அமர்த்தினால் தான் எதிர்கட்சிகள் கூட்டணி வலுப்பெறும் என்பது பிராந்தியக் கட்சிகளின் கருத்தாக உள்ளது. தன் கட்சிக்கே நிரந்தரத் தலைவரை

அமர்த்தத் திணறும் கட்சியால் கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது.

இப்பிரச்சனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் மற்றும் சிவசேனாவின் தலைவரும் மகராஷ்டிராவின் முதல்வருமான உத்தவ் தாக்கரே ஆகியோர் எடுக்கும் முயற்சிக்கு எங்கள் தலைவி மம்தாவும் ஆதரவளித்துள்ளார்.

இதற்காக சரத்பவாரை சரிகட்டி யுபிஏவின் தலைவரானால் எங்கள் கட்சியும் யுபிஏவில் சேரும் வாய்ப்புகள் உள்ளன.’’ எனத் தெரிவித்தனர்.

யுபிஏ அமைந்ததில் இருந்து அதன் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளார். இப்பதவிக்கு கடந்த மாதம் டிசம்பர் 11 இல் யுபிஏவின் புதிய தலைவராக சரத்பவார் அமரப் போவதாகத் தகவல்கள் வெளியானது.

அதே நாளில் இதை தன் செய்தித்தொடர்பாளர் மூலமாக காங்கிரஸ் மறுத்தது. இதையடுத்து, சரத்பவாரும் தாம் யுபிஏவின் தலைவர் பதவியில் அமரும் எண்ணம் இல்லை என மறுத்திருந்தார்.

இதன் பின்னணியில் அவருக்கு காங்கிரஸால் வந்த நெருக்கடி என சர்ச்சை கிளம்பியது. ஏனெனில், மகராஷ்டிராவில் சரத்பவார் முயற்சியால் காங்கிரஸின் ஆதரவு பெற்று சிவசேனாவின் கூட்டணி ஆட்சி நிலவுகிறது.

சிவசேனாவும் சரத்பவாரை யுபிஏவின் தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் பிறகு அடங்கிய இந்தவிவகாரம் மீண்டும் கிளம்பத் தொடங்கி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x