Published : 02 Jan 2021 05:01 PM
Last Updated : 02 Jan 2021 05:01 PM
''இது பாஜகவின் தடுப்பூசி, இதை நான் எப்படி நம்புவது?'' என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதற்கு உ.பி.துணை முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தடுப்பூசி விநியோகிப்பதற்கான சோதனைப் பயிற்சி சனிக்கிழமை நாடு முழுவதும் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை சோதிப்பதும், தடுப்பூசி போடப்படுவதில் ஏற்படும் சவால்களை அடையாளம் காண்பதும் இந்த பயிற்சிகளின் நோக்கமாகும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை கூறியது.
இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தயாராகிவரும் கோவிட் 19 தடுப்பூசி பாஜகவின் தடுப்பூசியாகும். பாஜகவிற்காக போடப்படும் இந்தத் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது? இவற்றை நான் நிச்சயம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை. 2022 தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வரும். அப்போது அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்.''
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
அகிலேஷ் மன்னிப்பு கேட்கவேண்டும்: உ.பி. துணை முதல்வர்
அகிலேஷ் யாதவ் கருத்துக்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடனடி கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேசவ் பிரசாத் மவுரியா மேலும் கூறுகையில் ''அகிலேஷ் யாதவ் நாட்டின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை அவமதித்துள்ளார். அகிலேஷ் யாதவுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லை, ஆனால் உத்தரப்பிரதேச மக்களுக்கு அகிலேஷ் யாதவ் மீது நம்பிக்கை இல்லை. தடுப்பூசி குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் நாட்டின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அவமானம். தடுப்பூசி குறித்து தவறாக பேசியதற்காக அகிலேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT