Published : 02 Jan 2021 12:52 PM
Last Updated : 02 Jan 2021 12:52 PM
நாகாலாந்து மாநிலத்தின் பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகாலாந்து மாநிலத்தின் துக்கோ பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தற்போது நாகாலாந்திலிருந்து மணிப்பூர் மாநிலத்திற்குப் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ள இக் காட்டுத் தீயை அணைக்க இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் விரைந்துள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தீயை நேரில் பார்த்த மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள மாவோ பகுதியைச் சேர்ந்த மாநில வனத்துறை ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் புதன்கிழமை வரை நாகாலாந்து காடுகளில் மட்டுமே பெருகி வந்தது. அதன் பின்னர் வியாழக்கிழமை மணிப்பூர் மலைகளுக்கு பரவியது. இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 7 குழுக்கள் காட்டுத்தீயை அணைக்க விரைந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"நேற்று, நாகாலாந்தின் கோஹிமாவுக்கு அருகிலுள்ள துக்கோ பள்ளத்தாக்கில் தீயணைப்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் மி -17 வி 5 ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது டன் சுமைகளை தாங்கக்கூடிய சி -130 ஜே ஹெர்குலஸ் விமானம் 48 தேசிய பேரிடர் மீட்புப் படையின் பணியாளர்களுடன் கவுஹாத்தியில் இருந்து திமாபூருக்கு சென்றுள்ளது. இது தவிர, இந்திய விமானப்படை நீரைநிரப்பிச்சென்று தீயை அணைக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்கும் பாம்பி பக்கெட் பொருத்தப்பட்ட 3 ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது.''
இவ்வாறு இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த அமித் ஷா உறுதி: முதல்வர் தகவல்
முன்னதாக, மணிப்பூர்-நாகாலாந்து எல்லையில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்குக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை உறுதி அளித்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், "துக்கோ பள்ளத்தாக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ பற்றிய நிலைமையை மதிப்பிடுவதற்கும் விவாதிப்பதற்கும் மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி அழைப்பு வந்தது . நிலைமையை விரைவாகக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் உள்துறை அமைச்சகம் செய்வதாக அமித் ஷா ஜி உறுதிப்படுத்தியுள்ளார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT